மற்ற மருத்துவமனைகளுக்கு பரிந்துரை செய்வதை தவிர்க்க நடவடிக்கை

அரக்கோணம் அரசு மருத்துவமனையில் இருந்து மற்ற மருத்துவமனைகளுக்கு பரிந்துரை செய்வதை தரிர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் வளர்மதி தெரிவித்தார்.

Update: 2023-02-23 18:13 GMT

கலெக்டர் ஆய்வு

அரக்கோணம் அரசு மருத்துவமனையில் கலெக்டர் வளர்மதி நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவசர சிகிச்சை பிரிவுக்கு சென்று நோயாளிகளிடம் அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து புற நோயாளிகள் பிரிவு, ஆண்கள் பிரிவு, பெண்கள் பிரிவு, குழந்தைகள் பிரிவு, மக்களைத் தேடி மருத்துவம், இயற்கை மற்றும் ஓமியோபதி ஆகிய பிரிவுகளுக்கு சென்று பார்வையிட்டு நோயாளிகளிடம் சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருவதை கேட்டறிந்தார்.

பின்னர் காய்ச்சல் காரணமாக அதிகமாக வருகிறார்களா என டாக்டர்களிடம் கேட்டார். அதற்கு சாதாரண காய்ச்சல் காரணமாகவே சிகிச்சை பெற வந்துள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து காய்ச்சல் வார்டு, பொது வார்டு, உள் நோயாளிகள் பிரிவுகளுக்கும் நேரடியாக சென்று ஆய்வு செய்து அங்கு சர்க்கரை நோய்க்கு சிகிச்சை பெற்றவர்களிடம் சிகிச்சை குறித்து கேட்டார்.

நடவடிக்கை

இதனை தொடர்ந்து கலெக்டர் வளர்மதி நிருபர்களிடம் கூறுகையில் அரக்கோணம் மருத்துவமனையில் நோயாளிகள் கூட்டம் அதிகளவில் இருப்பது தெரிகிறது. இங்கிருந்து நோபாளிகள் வாலாஜா, திருவள்ளூர் ஆகிய மாவட்ட அளவிலான மருத்துவமனைகளுக்கு பரிந்துரை செய்யப்படுகின்ற குறையை தீர்க்க இங்கேயே அனைத்து வசதிகளும் கொண்டுவரப்பட்டு நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்க ஆய்வு செய்யப்பட்டது. மருத்துவமனையில் பற்றாக்குறையாக உள்ள டாக்டர்கள், நர்ஸ்கள் பணியிடங்களை நிரப்புவதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற் கொள்ளப்படும் என தெரிவித்தார்.

ஆய்வின்போது அரக்கோணம் உதவி கலெக்டர் பாத்திமா, தாசில்தார் சண்முகசுந்தரம், அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர் நிவேதிதா ஆகியோர் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்