சாராய வியாபாரிகளுடன் தொடர்புடைய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
ஜோலார்பேட்டை பகுதியில் சாராய வியாபாரிகளுடன் தொடர்புடைய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறைதீர்வு கூட்டத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது.
குறைதீர்வு கூட்டம்
திருப்பத்தூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம் கலெக்டர் பாஸ்கரபாண்டியன் தலைமையில் நடந்தது. இதில் இலவச வீட்டுமனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை, கூட்டுறவு கடனுதவி, மாற்றுத்திறனாளிகள் நலத்திட்ட உதவிகள், குடிநீர் வசதி மற்றும் பொதுநலன் குறித்து 268 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டது.
இந்த மனுக்களை் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு தகுதியானதாக இருப்பின் உடனடியாக நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டார்.
சாராயம் விற்பனை
கூட்டத்தில் ஜோலார்பேட்டையை அடுத்த பாச்சல் ஊராட்சியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கொடுத்த மனுவில் பாச்சல் ஊராட்சியில் 8 ஆயிரத்துக்கும் அதிகமான குடியிருப்புகள் உள்ளன. பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்கள் அதிகமாக வசிக்கின்றனர். எங்கள் பகுதியில் சாராய விற்பனை கொடி கட்டி பறக்கிறது. போலீஸ் ஒத்துழைப்புடன் பாக்கெட் சாராயம் பகல், இரவு என விற்பனை செய்யப்படுகிறது.
மது போதைக்கு அடிமையாகும் இளைய தலைமுறையினரின் எதிர்காலம் கேள்விக் குறியாக மாறிவிட்டது. பள்ளி படிக்கும் மாணவர்கள் கூட மது அருந்தும் அவல நிலை திருப்பத்தூர் மற்றும் ஜோலார்பேட்டையில் அரங்கேறி வருகிறது. மது மட்டுமின்றி, கஞ்சா விற்பனையும் களைக்கட்டி வருகிறது. இதுகுறித்து காவல் துறை உயர் அதிகாரிகளிடம் பலமுறை புகார் மனு அளித்தும், மது விற்பனையை கட்டுப்படுத்த அவர்களால் முடியவில்லை.
நடவடிக்கை எடுக்க உத்தரவு
ஒரு சில போலீசாரின் துணையோடு மது விற்பனை செய்யப்படுகிறது. புகார் அளிக்கும் நபர்கள் குறித்த தகவலை காவல் துறையினரே சாராயம் விற்பனை செய்யும் நபர்களிடம் தெரிவித்துவிடுவதால் புகார் அளிக்க யாரும் முன்வரவில்லை. பாச்சல் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் மதுபோதைக்கு அடிமையாகி விஷசாராயத்தை அருந்தி கடந்த 2 நாட்களுக்கு முன்பு உயிரிழந்துள்ளார். இது எங்கள் பகுதியில் நடைபெறும் 2-வது உயிரிழப்பு ஆகும். சாராய வியாபாரிகளுடன் கைகோர்த்துள்ள போலீசார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது. மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் பாஸ்கரபாண்டியன் அந்த மனுவை கலால் உதவி ஆணையர் பானுவிடம் வழங்கி உடனடியாக ஆய்வு நடத்தி சாராய விற்பனையை முழுமையாக ஒழிக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
விருது
கூட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக, நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தில் மாவட்ட அளவிலான தேர்வு குழுவின் மூலமாக தேர்வு செய்யப்பட்டு, சிறப்பாக செயல்பட்ட 7 மகளிர் சுயஉதவிக்குழுக்கள், கிராம வறுமை ஒழிப்பு சங்கம், ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகள், பகுதி அளவிலான கூட்டமைப்புகளுக்கு மணிமேகலை விருதுகள் மற்றும் ரூ.3½ லட்சம் மதிப்பிலான பரிசுத்தொகைகளை கலெக்டர் வழங்கினார்.
மேலும் மக்கள் குறை தீர்வு நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்ற கலெக்டர் ஒரு மனுவிற்கு உடனடியாக தீர்வு காணப்பட்டு மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் ரூ.8,500 மதிப்பிலான காதொலி கருவியை வழங்கினர்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி, மகளிர் திட்ட இயக்குனர் ரேணுகாதேவி, கலால் உதவி ஆணையர் பானு, மாவட்ட சமூக நல அலுவலர் ஸ்டெல்லா, ஊராட்சிகள் உதவி இயக்குனர் விஜயகுமாரி, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பாலாஜி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.