ரூ.3¼ லட்சம் மோசடி செய்தவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்-போலீஸ் சூப்பிரண்டிடம் தொழிலாளி புகார் மனு

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.3¼ லட்சம் மோசடி செய்தவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீஸ் சூப்பிரண்டிடம் தொழிலாளி புகார் மனு கொடுத்தார்.

Update: 2023-03-29 19:51 GMT

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.3¼ லட்சம் மோசடி செய்தவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீஸ் சூப்பிரண்டிடம் தொழிலாளி புகார் கொடுத்தார்.

குறைதீர்க்கும் நாள்

நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் தலைமை தாங்கி பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை வாங்கினார்.

இந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் பலர் நில அபகரிப்பு குறித்தும் புகார் மனு கொடுத்தனர். இந்த மனுக்களை விரைந்து முடிக்க உத்தரவிட்டார்.

வெளிநாட்டில் வேலை

நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது 50) என்ற தொழிலாளி நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு வந்து ஒரு புகார் மனு கொடுத்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

எனது மூத்த மகன் ஸ்ரீவிஷ்ணு. இவர் டிப்ளமோ படித்து விட்டு வேலை தேடி வருகிறார். சிங்கப்பூரில் வேலை பார்த்து வரும் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த ஒருவர், எனது மகன் வேலை தேடுவதை அறிந்து வெளிநாட்டில் அதிக சம்பளத்தில் வேலை வாங்கி தருவதாக என்னிடம் கூறினார். இதற்கு விசா வாங்க ரூ.3¼ லட்சம் செலவு ஆகும் என அவர் கூறினார். இதனை நம்பி கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் வரை 4 தவணைகளில் ரூ.3¼ லட்சத்தை அவர் கூறிய 3 வங்கி கணக்குகளில் செலுத்தினேன். அதன் பின்னர் அவரிடம் போன் செய்த போது ஒரு சில நாட்களில் வேலை வாங்கி தருவதாக கூறி காலத்தை கடத்தி வந்தார்.

மீட்டு தர வேண்டும்

இந்த நிலையில் தற்போது அவரது செல்போன் 'சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டுள்ளது. அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. எனவே வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த நபர் மீது நடவடிக்கை எடுத்து எனது பணத்தை மீட்டுத்தர வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்