உதயநிதி ஸ்டாலினை மிரட்டிய சாமியார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
உதயநிதி ஸ்டாலினை மிரட்டிய சாமியார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
கோவை
அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை மிரட்டிய சாமியார் மீது நடவடிக்கை எடுக்க கோரி தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது.
புகார் மனு
தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன் தலைமையில் நேற்று அந்த அமைப்பை சேர்ந்தவர்கள் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்தனர். பின்னர் அவர்கள் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-
கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் தமிழக அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசிய சனாதனம் குறித்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதத்தில் உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியை சேர்ந்த பரமஹம்ச ஆச்சாரியார் என்ற சாமியார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை கடுமையாக பேசி அவரின் உருவப்படத்தை எரித்து உள்ளார்.
நடவடிக்கை எடுக்க வேண்டும்
மேலும் அமைச்சர் உதயநி ஸ்டாலின் தலைக்கு ரூ.10 கோடி சன்மானம் அளிப்பதாக பேசிய வீடியோ ஒன்று வேகமாக பரவி வருகிறது. மேலும் பரமஹம்ச ஆச்சாரியார் வெளியிட்ட வீடியோ காட்சிகள் வன்முறையை தூண்டும் விதத்தில் உள்ளது. இவ்வகையில் ஒரு மாநில அமைச்சருக்கே கொலை மிரட்டல் விடுக்கின்ற வகையிலும் மற்றும் சமூகத்தில் கலவரத்தை தூண்டுகின்ற வகையிலும் பேசிய பரமஹம்ச ஆச்சாரியார் என்பவர் மீது சட்டரீதியாக குற்ற வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இவ்வாறு அதில் கூறி இருந்தது.