ரூ.52½ லட்சம் மோசடி செய்த தந்தை, மகன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

ஏலச்சீட்டு நடத்தி ரூ.52½ லட்சம் மோசடி செய்த தந்தை, மகன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.

Update: 2023-06-26 13:34 GMT

அணைக்கட்டு தாலுகா ஓடுகத்தூர், மாதனூர், கீழ்கொத்தூர், வரதலம்பட்டு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியை சேர்ந்த 24 பேர் இன்று வேலூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.

அதில் ஒடுகத்தூர் பஜார் தெருவை சேர்ந்த தந்தை, மகன் ஆகியோர் சேர்ந்து கடந்த சில ஆண்டுகளாக மாதாந்திர ஏலச்சீட்டு நடத்தி வந்தனர். நாங்கள் 24 பேரும் ஏலச்சீட்டில் ரூ.52 லட்சத்து 57 ஆயிரம் செலுத்தினோம்.

கடந்த 2022-ம் ஆண்டு சீட்டு முதிர்வுகாலம் முடிவடைந்தது. ஓரிரு மாதங்களில் முழு பணத்தையும் தருவதாக இருவரும் கூறினார்கள். ஆனால் பல மாதங்களாக பணம் தராமல் மோசடி செய்து வந்தனர்.

இதுகுறித்து வேலூர் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு மற்றும் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தோம்.

அதன்பேரில் போலீசார் தந்தை, மகனை அழைத்து விசாரித்தனர். அப்போது அவர்கள் பணத்தை சில மாதங்களில் திருப்பி கொடுப்பதாக உறுதி அளித்தனர்.

ஆனால் கூறியபடி பணத்தை கொடுக்கவில்லை. தற்போது தந்தையும், மகனும் ஒடுகத்தூரில் உள்ள வீட்டை காலி செய்துவிட்டு தலைமறைவாக உள்ளனர்.

ஏலச்சீட்டு நடத்தி ரூ.52½ லட்சம் மோசடி செய்த தந்தை, மகன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் எங்களின் பணத்தை பெற்றுத்தர வேண்டும் என்று கூறியிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்