திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் - டிஜிபிக்கு தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கடிதம்
திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது நடவடிக்கை எடுக்க கோரி டிஜிபிக்கு தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கடிதம் எழுதி உள்ளார்.
சென்னை,
இது தொடர்பாக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை எழுதிய கடிதத்தில்,
பொது மேடைகளில் பெண்களை அவதூறாகப் பேசுவது திமுகவினருக்கு வாடிக்கையாகி விட்டது. நீண்ட காலமாக, தமிழக மக்கள் இந்த மலிவான அரசியல் மேடைப் பேச்சை எதிர்கொண்டு வருகின்றனர். சமீபத்தில், பாஜக பெண் தலைவர்களை, கட்சிக் கூட்டத்தில் தரக்குறைவாகப் பேசியதாக, திமுக உறுப்பினர் திரு. சைதை சாதிக் மீது முறைப்படி புகார் அளித்தோம்.
கடும் எதிர்ப்பு மற்றும் தொடர்ச்சியான அழுத்தத்திற்குப் பிறகே, திரு. சைதை சாதிக் மீது காவல்துறை எஃப்ஐஆர் பதிவு செய்தது. ஆனால் கைது நடவடிக்கை மேற்கொள்ளாமல் காலம் தாழ்த்தியது காவல்துறை.
திரு. சைதை சாதிக் சமீபத்தில், தேசிய மகளிர் ஆணையத்தில் ஆஜராகி, தனது நடத்தைக்காக, நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டார். ஆனாலும், அதிகாரத்தில் இருக்கிறோம் என்ற ஆணவத்தில், திரு. சைதை சாதிக்கின் நடத்தையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை என்பது அவரது சமீபத்திய பொதுப் பேச்சுகளை வைத்துப் பார்க்கமுடிகிறது.
காவல்துறை என்பது அனைத்து தரப்பு மக்களுக்கும் சமமாக இயங்க வேண்டும் என்றே மக்கள் எதிர்பார்க்கின்றனர். ஆனால் ஆளும் அரசியல் தலைவர்களுக்கு சாதகமாக இயங்கி, தங்கள் அடிப்படை பொறுப்புகளை மறந்து இன்று காவல்துறை செயலற்றுப் போய் இருக்கிறது.
இழிவான மேடைப் பேச்சுகளுக்கு பெயர் பெற்ற திமுக ஆபாசப் பேச்சாளர் திரு. சிவாஜி கிருஷ்ணமூர்த்தி என்பவர், மாண்புமிகு தமிழக ஆளுநரை அவதூறாகப் பேசியதுடன், அவரது பேச்சில் மாண்புமிகு ஆளுநரை சொல்லுதலுக்கு ஆகாத தகாத வார்த்தைகளை பயன்படுத்தி விமர்சித்துள்ளதை காவல்துறை கண்டும் காணாமல் இருப்பது கவலை அளிக்கிறது.
அரசியலமைப்புச் சட்டத்தின் பாதுகாவலரான ஆளுநரை, தவறான வார்த்தைகளால் விமர்சித்த திரு. சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மேல், உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். அவரது கருத்துக்கள், கருத்துச் சுதந்திரம் என்று கருதப்படக்கூடாது. தமிழக முதல்வரை பற்றி அதே இழிவான வார்த்தைகள் பேசப்பட்டால், காவல்துறை அதை கருத்துச் சுதந்திரமாகக் கருதாது என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.
சென்னையில் சமீபத்தில் பாராளுமன்ற உறுப்பினர் திருமதி கனிமொழி அவர்கள் பங்கேற்ற திமுக பொதுக்கூட்டத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவலரை பாலியல் சீண்டல் செய்த இரண்டு திமுக இளைஞர் அணி நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது தமிழக காவல்துறை.
இந்த சம்பவம் குறித்து தமிழக பாரதிய ஜனதா கட்சி கண்டனம் தெரிவித்த பின்னர் நடவடிக்கை என்ற பெயரில் நாடகம் ஒன்றை அரங்கேற்றியது நமது காவல்துறை பெண் காவலர் கொடுத்த புகாரை திரும்ப பெறச்செய்வது தான் நடவடிக்கையா?
நீண்ட காலமாக, தி.மு.க.வினர், பொது மேடைகளை, தரக்குறைவான பேச்சுகளுக்குப் பயன்படுத்தி வருகின்றனர்.
தொடர்ந்து இது போல் நிகழாமல் தடுக்க, கடுமையான நடவடிக்கையை எதிர்பார்க்கிறோம். இதுபோன்ற அவதூறான பேச்சுகளைக் கண்டும் காணாமல் இருக்கும் காவல்துறையின் செயலற்ற தன்மை, அந்த அவதூறுகளுக்கு ஒப்புதல் அளிக்கும் விதமாக இருக்கிறது என்பதையும் நாங்கள் தெளிவுபடுத்த விரும்புகிறோம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.