ஆட்டோவில் அதிக குழந்தைகளை ஏற்றிச்சென்றால் டிரைவர் மீது நடவடிக்கை

ஆட்டோக்களில் அதிக எண்ணிக்கையில் பள்ளி குழந்தைகளை ஏற்றாலோ, செல்போன் பேசிக்கொண்டு ஆட்டோக்களை ஓட்டிச் சென்றாலோ டிரைவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் எச்சரித்துள்ளார்.

Update: 2022-06-29 11:49 GMT

குலசேகரன்பட்டினம்:

ஆட்டோக்களில் அதிக எண்ணிக்கையில் பள்ளி குழந்தைகளை ஏற்றாலோ, செல்போன் பேசிக்கொண்டு ஆட்டோக்களை ஓட்டிச் சென்றாலோ டிரைவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் எச்சரித்துள்ளார்.

ஆட்டோ டிரைவர்களுக்கு விழிப்புணர்வு

குலசேகரன்பட்டினத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன், ஆட்டோ டிரைவர்களை நேரில் சந்தித்து போக்குவரத்து விதிமுறைகள் மற்றும் மோட்டார் வாகன சட்டத்தை கடைபிடித்து விபத்தில்லாமல் வாகனம் ஓட்டுமாறு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

அப்போது அவர் கூறுகையில், முறப்பநாடு போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த விபத்தில் டிரைவர் தனது ஆட்டோவில் அரசு நிர்ணயிக்கப்பட்ட எண்ணிக்கையை விட அதிக அளவில் பள்ளிக்குழந்தைகளை ஏற்றிச் சென்றதாலும், அஜாக்கிரதையாகவும், வேகமாகவும் ஓட்டி ஆட்டோ கவிழ்ந்ததில் செல்வநவீன் என்ற 4 ½ வயது குழந்தை பள்ளிக்குச் சென்ற முதல் நாளிலேயே பலியானான். எனவே, ஆட்டோவில் செல்லும் குழந்தைகளின் எதிர்காலத்தையும், டிரைவர்களை நம்பி குழந்தைகளை ஆட்டோவில் அனுப்பிவிடும் பெற்றோர்களையும், உங்கள் குடும்பத்தாரையும் மனதில் வைத்துக்கொண்டு கவனத்துடன் வாகனத்தை ஓட்ட வேண்டும்.

தகவல் தெரிவிக்கலாம்

நிர்ணயிக்கப்பட்ட எண்ணிக்கையை விட அதிக குழந்தைகளை ஆட்டோவில் ஏற்றிச் செல்லக்கூடாது. மதுபோதை மற்றும் செல்போன் பேசிக்கொண்டு ஓட்டக்கூடாது, விபத்தில்லாமல் வாகனம் ஓட்டவேண்டும். இதை மீறி செயல்படும் ஆட்டோ டிரைவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும், கஞ்சா மற்றும் போதைப்பொருள் விற்பனை மற்றும் கடத்தல் குறித்து ஏதேனும் தகவல் தெரிந்தால் இலவச அவசர தொலைபேசி எண். 100 மற்றும் மாவட்ட காவல்துறை கட்டுப்பாட்டு அறை எண். 95141 44100 என்ற எண்ணில் தகவல் தெரிவிக்க வேண்டும். தகவல் தருபவர்கள் குறித்த விபரங்கள் ரகசியமாக வைக்கப்படும், என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்