மரபணு மாற்றம் செய்த பருத்தி விதைகளை விற்றால் நடவடிக்கை - அதிகாரி எச்சரிக்கை

மரபணு மாற்றம் செய்த பருத்தி விதைகளை விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நெல்லை விதை ஆய்வு துணை இயக்குனர் ராஜ்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2022-09-07 22:09 GMT

நெல்லை விதை ஆய்வு துணை இயக்குனர் ராஜ்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது:-

பருத்தியில் களைக்கொல்லி தாங்கி வளரக்கூடிய வகையில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளை விற்பனை செய்வதற்கு மத்திய அரசு அங்கீகாரம் வழங்கவில்லை. அதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற அரசு அங்கீகாரம் இல்லாத மரபணு மாற்றம் செய்யப்பட்ட பருத்தி ரக விதைகளை விற்பனை செய்வதும், வாங்கி பயிர் செய்வதும் விதைகள் சட்டப்படி குற்றமாகும்.

களைக்கொல்லி தாங்கி வளரக்கூடிய மரபணு மாற்றம் செய்யப்பட்ட பருத்தி விதைகளை விற்பனை செய்வது தெரிந்தால் உடனடியாக அந்தந்த பகுதியில் உள்ள விதை ஆய்வாளருக்கு அல்லது விதை ஆய்வு துணை இயக்குனர் அலுவலக எண் 0462 2553017-க்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். மரபணு மாற்றம் செய்யப்பட்ட பருத்தி போன்ற விதை விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் விற்பனை செய்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

அங்ககச் சான்று துறை இயக்குனர் உத்தரவின்படி மாவட்டம் தோறும் கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. நெல்லை, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் வேளாண்மை இணை இயக்குனர் தலைமையில் விதை ஆய்வு துணை இயக்குனர், விதை சான்று உதவி இயக்குனர், அந்தந்த வட்டார வேளாண்மை உதவி இயக்குனர்கள், விதை ஆய்வாளர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்