திருக்கோவிலூரில் நடந்த ஜமாபந்தியில் பெறப்பட்ட 820 மனுக்கள் மீது நடவடிக்கை - தாசில்தார் தகவல்
திருக்கோவிலூரில் நடந்த ஜமாபந்தியில் பெறப்பட்ட 820 மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தாசில்தார் கூறினார்.
திருக்கோவிலூர்,
திருக்கோவிலூர் தாலுகா அலுவலகத்தில் கடந்த வாரம் ஜமாபந்தி நடைபெற்றது. ஒரு வாரம் நடைபெற்ற ஜமாபந்தி நிகழ்ச்சியில் திருக்கோவிலூர் தாலுகாவை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களின் கோரிக்கை தொடர்பான மனுக்களை கொடுத்தனர். இதனை ஜமாபந்தி அலுவலரும், மாவட்ட வழங்கல் அலுவலருமான ஷார்லி ஏஞ்சல் பெற்றுக் கொண்டதுடன், மனுக்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு தீர்வு காணப்படும் என உறுதி அளித்திருந்தார். மொத்தம் பெறப்பட்ட 826 மனுக்களில் 6 மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு பட்டா நகல் வழங்கப்பட்டது. மீதமுள்ள 820 மனுக்கள் துறைவாரியாக பிரிக்கப்பட்டு நடவடிக்கைக்கு அனுப்பப்பட்டுள்ளது. மேற்கண்ட தகவலை திருக்கோவிலூர் தாசில்தார் கண்ணன் தெரிவித்துள்ளார்.