சினிமா தியேட்டர்களில் லியோ படத்திற்கு கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை ; கலெக்டர் அருண்தம்புராஜ் எச்சரிக்கை

கடலூர் மாவட்ட சினிமா தியேட்டர்களில் லியோ படத்திற்கு கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் அருண்தம்புராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2023-10-18 18:45 GMT

சிறப்பு காட்சிக்கு அனுமதி

தமிழகத்தில் உள்ள திரையரங்குகளில் லியோ திரைப்படத்திற்கு கூடுதலாக ஒரு சிறப்பு காட்சி இன்று (வியாழக்கிழமை) முதல் வருகிற 24-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) வரை (ஒரு நாளைக்கு அதிகபட்சம் 5 காட்சிகள்) நடத்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

கடலூர் மாவட்டத்தில் சினிமா தியேட்டர்களுக்கு உரிமம் வழங்கும் அலுவலர்கள் தங்கள் அதிகார வரம்பிற்குட்பட்ட பகுதிகளில் 'லியோ" திரைப்படத்திற்கான ஒரு சிறப்பு காட்சியை திரையிட அனுமதித்து அனைத்து திரையரங்குகளிலும் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் 24-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) வரை (அதாவது ஒரு நாளைக்கு அதிகபட்சம் 5 காட்சிகள்) அரசு குறித்த நேரத்தில் திரையிடுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை

மேலும், ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள சிறப்பு கண்காணிப்பு குழுவின் மூலம் உரிமம் வழங்கும் அலுவலர்களின் அதிகார வரம்பிற்குட்பட்ட பகுதிகளில் உள்ள சினிமா தியேட்டர்களில் நிர்ணயிக்கப்பட்டுள்ள நுழைவு கட்டணங்கள் தமிழ்நாடு சினிமா (ஒழுங்கு முறை) விதிகள் 1957 மற்றும் தமிழ்நாடு கேளிக்கை வரி சட்ட விதிகளை விட கூடுதலாக வசூல் செய்யப்படுகிறதா? என்பதை கண்காணித்து, விதிமீறல்கள் இருப்பின் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழ்நாடு சினிமா விதிகளின்படி 14 ஏ படிவம் "சி" உரிமத்தின் நிபந்தனையின்படி புதிய திரைப்படம் வெளியிடும் நிகழ்ச்சியின் போது, முறையான போக்குவரத்து மற்றும் வாகனங்கள் நிறுத்துமிடங்கள் ஏற்பாடுகளை உறுதிசெய்து கொள்ள வேண்டும். அதிக கட்டணம் வசூலித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். வட்ட அளவிலும் கோட்ட அளவிலும் கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படும். மேற்கண்ட தகவல் மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்