கொள்ளிடம் ஆற்றில் குப்பைகளை கொட்டினால் நடவடிக்கை
கொள்ளிடம் ஆற்றில் குப்பைகளை கொட்டினால் நடவடிக்கை எடுக்கப்படும் என நீர்வளத்துறை சார்பில் எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டது.
கொள்ளிடம்:
கொள்ளிடம் ஆற்றில் குப்பைகளை கொட்டினால் நடவடிக்கை எடுக்கப்படும் என நீர்வளத்துறை சார்பில் எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டது.
சுகாதார சீர்கேடு
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் சோதனை சாவடி அருகே கொள்ளிடம் ெரயில் பாலத்தையொட்டி கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக கொள்ளிடம் பகுதியில் உள்ள 20 கிராமங்களில் சேகரிக்கப்படும் குப்பைகள் கொட்டப்பட்டு வந்தன. இதனால் கொள்ளிடம் ஆற்றுநீர் மாசுபட்டது. இதனால் கொள்ளிடம் ஆற்றங்கரை சாலையில் நடந்து செல்லும் கிராம மக்கள் சிரமப்பட்டு வந்தனர். மேலும் குப்பைகளுடன் இறந்த கால்நடைகள் மற்றும் இறைச்சி கழிவுகள் சேர்த்து கொட்டப்பட்டதால் துர்நாற்றம் வீசியதோடு சுகாதார சீர்கேடு ஏற்பட்டது. இதனால் மயிலாடுதுறை மாவட்ட நீர்வளத்துறை சார்பில் குப்பை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து எச்சரிக்கை விடப்பட்டது.
விளம்பர எச்சரிக்கை பலகை
இதையடுத்து ரெயில் பாலம் அருகே கடந்த 10 நாட்களாக குப்பை கொட்டுவது நிறுத்தப்பட்டது. மயிலாடுதுறை மாவட்ட நீர்வளத்துறை கீழ் காவிரி வடிநில கோட்ட செயற்பொறியாளர் சண்முகம் உத்தரவின் பேரிலும், சீர்காழி உதவி செயற்பொறியாளர் விஜயகுமார் பரிந்துரையின் பேரிலும் கொள்ளிடம் உதவி பொறியாளர் சிவசங்கரன், பாசன ஆய்வாளர் சீனிவாசன் மற்றும் நீர்வளத்துறை ஊழியர்கள், விவசாயிகள் கொள்ளிடம் ெரயில் பாலம் அருகே குப்பை கொட்டப்பட்டுள்ள இடத்தில் யாரும் குப்பை கொட்ட கூடாது என விளம்பர எச்சரிக்கை பலகையை வைத்தனர்.