ஆறுகளில் வெடிவைத்து மீன்கள் பிடித்தால் நடவடிக்கை

ஆறுகளில் வெடிவைத்து மீன்கள் பிடித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2023-01-06 18:45 GMT

கொரடாச்சேரி:

ஆறுகளில் வெடிவைத்து மீன்கள் பிடித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஆறுகளில் மீன்குஞ்சுகள் விடும் நிகழ்ச்சி

திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரி ஒன்றியம், எண்கண் வெட்டாற்றில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் சார்பில் பிரதம மந்திரி மீன் வள மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் ஆறுகளில் நாட்டின மீன் குஞ்சுகள் விடும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தலைமை தாங்கினார். பூண்டி.கே.கலைவாணன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார்.

நிகழ்ச்சியில் கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் பேசியதாவது:-

மக்கள் பெரிதும் விரும்பி உண்ணப்படுவது நாட்டின மீன் வகைகள் ஆகும். தற்போது நாட்டின மீன்வளம் ஆறுகளில் போதுமான நீரின்மை, குறைந்த காலமே நீர் இருத்தல் மற்றும் சீரற்ற மழைப்பொழிவு ஆகிய காரணங்களினால் மீன்கள் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

வெடி வைத்து மீன்பிடிக்க கூடாது

இவ்வகை மீன் இனங்கள் மருத்துவக் குணம் மற்றும் மிகுந்த சுவையில் விளங்குகின்றன. தமிழ்நாட்டில் நாட்டின மீன்வளங்களை பாதுகாத்து பெருக்கிட ஆறுகளில் மீன் குஞ்சுகள் இருப்பு செய்திடும் திட்டத்தின் கீழ் 2022-2023-ம் ஆண்டில் 40 லட்சம் மீன்குஞ்சுகள் ரூ.124 கோடி செலவில் ஆறுகளில் விடும் பணி நடைபெற்று வருகிறது.

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள காவிரி 28 கிளை ஆறுகளில் சேல் கெண்டை, கல்பாசு, இந்திய பெருங்கெண்டைகள் ஆகிய மீன்குஞ்சுகள் இருப்பு மேற்கொள்ளப்படுகிறது. மீன்குஞ்சுகள் 80-100 மி.மீ அளவுக்கு மீன்விரலிகளாக வளர்த்தெடுக்கப்பட்ட பின்னர் காவிரியின் கிளை ஆறுகளில் விடப்படும்.

மீனவர்கள் ஆறுகளில் மீன்பிடிக்கும் போது பயன்படுத்தும் வலையின் கண்ணி அளவு 80 மி.மீக்கு மேல் இருக்க வேண்டும். மீனவர்கள் சிறிய ரக மீன்குஞ்சுகள், சினை மீன்கள் பிடிப்பதை தவிர்க்க வேண்டும். ஆறுகளில் வெடி வைத்து மீன்பிடிக்க கூடாது. மீன்களின் வாழ்விடத்தை சிதைப்பது மட்டுமல்லாது, மீன் உற்பத்தியை கணிசமாக குறைத்து விடும். மீறி மீன்பிடித்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.

பதிவு செய்ய வேண்டும்

மீனவர்கள் தடை செய்யப்பட்ட பகுதியில் மீன்பிடிப்பதை தவிர்க்க வேண்டும். மீனவர்கள் தினசரி பிடிக்கும் மீன்களின் வகை மற்றும் அளவினை பதிவு செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ப.சிதம்பரம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை இணை இயக்குனர் இளம்வழுதி, வருவாய் கோட்டாட்சியர் சங்கீதா உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்