சென்னை முழுவதும் ஒரே நாளில் அதிரடி வேட்டை: கஞ்சா விற்ற ரவுடி உள்பட 433 பேர் மீது நடவடிக்கை
சென்னை முழுவதும் ஒரே நாளில் அதிரடி வேட்டையில் கஞ்சா விற்ற ரவுடி உள்பட 433 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சென்னை ராயப்பேட்டை திரு.வி.க. சாலையில் உள்ள பூங்கா ஒன்றில் சிலர் கஞ்சா விற்பனை செய்வதாக அண்ணாசாலை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனடியாக குறிப்பிட்ட பூங்காவிற்கு மாறு வேடத்தில் சென்று அண்ணாசாலை போலீசார் கண்காணித்தனர். அப்போது அங்கு கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட சரத் என்ற சரத்குமார் (வயது 29), ரமேஷ்அரவிந்த் (28), அருண் (31) ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 6 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இவர்களில் சரத் மீது ஏற்கனவே 2 கொலை வழக்கு உள்பட 11 வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும், அவரது பெயர் ரவுடி பட்டியலில் இருப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
இதையடுத்து, போலீஸ் கமிஷனர் சங்கர்ஜிவால் உத்தரவின் பேரில், சென்னையில் நேற்றுமுன்தினம் முழுவதும் ரவுடிகளுக்கு எதிராக அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. அதில் 5 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர். பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்ட 7 ரவுடிகளும் கைது செய்யப்பட்டு, உரிய கோர்ட்டுகளில் ஆஜர்படுத்தப்பட்டனர். 30 ரவுடிகளிடம் திருந்தி வாழ்வதாக உறுதி மொழிபத்திரம் வாங்கப்பட்டது. மேலும் 381 பழைய ரவுடிகள் எச்சரிக்கை செய்யப்பட்டனர். மொத்தம் 433 ரவுடிகளிடம் உரிய விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.