அனுமதியின்றி அன்னதானம் வழங்கினால் நடவடிக்கை-கலெக்டர் எச்சரிக்கை

அனுமதி பெறாமல் அன்னதானம் வழங்கக் கூடாது என்று மாவட்ட கலெக்டர் முருகேஷ் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

Update: 2023-05-02 17:17 GMT

அனுமதி பெறாமல் அன்னதானம் வழங்கக் கூடாது என்று மாவட்ட கலெக்டர் முருகேஷ் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு அன்னதானம் செய்ய 108 பேர் விண்ணப்பம் செய்து உள்ளனர். அவர்களுக்கான நிபந்தனைகள் குறித்து ெதரிவிப்பதற்கான கூட்டம் நேற்று மாலை திருவண்ணாமலையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் முருகேஷ் தலைமை தாங்கி பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

திருவண்ணாமலையில் 22 இடங்களில் அன்னதானம் வழங்க அனுமதிக்கப்பட்டு உள்ளது. அனுமதி வழங்கப்பட்ட இடத்தில் அனுமதி அளிக்கப்பட்ட நாள் மற்றும் நேரத்தில் மட்டுமே அன்னதானம் வழங்கப்படவேண்டும். அனுமதி பெறாமல் அன்னதானம் வழங்கக் கூடாது. கிரிவலப்பாதையில் பக்தர்களுக்கு இடையூறு இல்லாமல் கிரிவலப்பாதையில் இருந்து 100 மீட்டர் உள்புறம் வைத்து அன்னதானம் வழங்க வேண்டும்.

சுத்தமான குடிநீர் கொண்டு உணவு சமைத்திட வேண்டும். நோய்த்தொற்று உள்ளவர்களை அன்னதானம் சமைக்கவோ மற்றும் வழங்கவோ அனுமதிக்க கூடாது.

வாழை இலையில் மட்டுமே அன்னதானம் வழங்கவேண்டும். உணவு பொருட்கள் தரமானதாகவும், துய்மைதானதாகவும் மற்றும் கலப்படம் இல்லாமலும் இருக்க வேண்டும். தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் தட்டுகளில் அன்னதானம் வழங்ககூடாது. பிளாஸ்டிக் டம்பளர்கள் மூலம் குடிநீர் வினியோகம் செய்யக் கூடாது.

காலாவதி தேதி

உணவு கழிவு பொருட்களை போடுவதற்கு ஏதுவாக குப்பை தொட்டிகளை ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும். அன்னதானம் அளிப்பவர்களே உணவு கழிவுகளை சேகரித்து அகற்ற வேண்டும். அன்னதானத்தை தயாரிக்க சில்வர், எவர்சில்வர் போன்ற துருபிடிக்காத பாத்திரங்களை கொண்டு சமைக்க வேண்டும். பொறிப்பதற்கு பயன்படுத்தப்படும் எண்ணெய் 3 முறைக்கு மேல் பயன்படுத்தக்கூடாது. அனைத்து உணவுப் பொருட்களும் காலாவதி தேதி இருப்பதை உறுதி செய்து அந்த தேதிக்குள் பயன்படுத்திட வேண்டும்.

சமைத்த உணவினை 3 மணி நேர கால அவகாசத்திற்குள் வினியோகம் செய்திட வேண்டும். தங்களிடம் அன்னதானத்தை சாப்பிட்டு உடல் உபாதை ஏற்பட்டால் தங்களின் அன்னதானத்தை நிறுத்தி விட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ வசதி செய்த பின் உணவு பாதுகாப்புத்துறைக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும்.

மாவட்ட நிர்வாகம் குறிப்பிட்டு உள்ள அறிவுரைகளை பின்பற்றாதவர்கள் மீது உணவு பாதுகாப்பு சட்டம் 2006-ன்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் ராமகிருஷ்ணன், உணவு பாதுகாப்பு அலுவலர்கள் எழில் சிக்கயராஜா, சிவபாலன், சுப்பிரமணி, சேகர், இளங்கோ, திருவண்ணாமலை தாசில்தார் சரளா மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்