கோவிலில் தரிசனம் செய்ய விடாமல் தடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மனு
கோவிலில் தரிசனம் செய்ய விடாமல் தடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மனு அளிக்கப்பட்டது.
தாமரைக்குளம்:
குறை தீர்க்கும் நாள் கூட்டம்
அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட கலெக்டர் ஆணி மேரி ஸ்வர்ணா தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக பொதுமக்கள் மனுக்களை அளித்தனர். இதில் அரியலூர் நகராட்சி ஏ.ஐ.டி.யு.சி. சுகாதார தொழிற்சங்கம் சார்பில் ஒரு மனு அளிக்கப்பட்டது. அதில், அரியலூர் நகராட்சியில் துப்புரவு பணி செய்து வரும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு 31 மாதத்திற்கான நிலுவைத்தொகையை உடனடியாக வழங்க வேண்டும். ஒப்பந்த தொழிலாளர்களுக்கு முறையாக சம்பளம் வழங்கப்பட வேண்டும். துப்புரவு பணியாளர்களுக்கு குடியிருப்பு வசதி ஏற்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டிருந்தது.
கோவிலுக்கு செல்பவர்களை தடுப்பவர்கள் மீது...
சோழமாதேவி கிராமத்தில் 50-க்கும் மேற்பட்ட மண்பாண்ட தொழிலாளர்கள் பல தலைமுறைகளாக வசித்து வருகின்றனர். இவர்களுக்கு இந்த ஆண்டுக்கான மழைக்கால நிவாரணத்தொகை இதுவரை வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து மண்பாண்ட தொழிலாளர்கள் நேற்று கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து, தங்களது வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் மழைக்கால நிவாரண நிதியை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கோரி மனு அளித்தனர்.
பல்வேறு கிராமங்களை சேர்ந்த ஒரு சமுதாய மக்கள், கலெக்டரிடம் ஒரு மனு அளித்தனர். அதில், புதுக்குடியில் உள்ள ஒரு கோவிலை மேலூர், தண்டலை, கல்லாத்தூர், இறவாங்குடி, இளையப்பெருமாள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஒரு சமுதாய மக்கள் குலதெய்வமாக வழிபட்டு வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக இக்கோவிலுக்கு தரிசனம் செய்ய வரும் மக்களை, அங்குள்ள மற்றொரு சமூகத்தினர் தடுத்து வருகின்றனர். இது குறித்து ஏற்கனவே மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. எனவே கோவிலில் வழிபாடு நடத்த ெசல்பவர்களை தடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். வழிபாடு நடத்த அனுமதிக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.
அகற்றப்படாத மண்
திருமானூர் அருகே உள்ள குருவாடி ஊராட்சி மன்ற தலைவர் சுப்புலட்சுமி ரவி, கிராம மக்களுடன் வந்து ஒரு மனு கொடுத்தார். அதில், கோமானில் இருந்து குருவாடி வரும் சாலையில் பொதுப்பணி துறையினரால் பாலம் கட்டப்பட்டது. பணிகள் முடிந்த பிறகும் மழைநீர் செல்லும் வாய்க்காலில் கொட்டப்பட்டிருந்த மண் அகற்றப்படாமல் உள்ளதால், மழை காலங்களில் விவசாய நிலங்களில் மழைநீர் தேங்கி பயிர்கள் சேதம் அடையும் நிலை உள்ளது. எனவே மண்ணை அப்புறப்படுத்த வேண்டும், என்று கூறியிருந்தார்.
கூட்டத்தில் மொத்தம் 381 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்களை பெற்ற கலெக்டர், அவை குறித்து உரிய காலத்திற்குள் நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். கூட்டத்தில் பல்வேறு துறைகளை ேசர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.