பனை மரங்களை வெட்டியவர்கள் மீது நடவடிக்கை - மதுரை ஐகோர்ட்டில் தகவல்

பனை மரங்களை வெட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என மதுரை ஐகோர்ட்டில் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Update: 2022-11-03 19:52 GMT


பனை மரங்களை வெட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என மதுரை ஐகோர்ட்டில் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

பனை மரங்கள்

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடியைச் சேர்ந்த பெரியசாமி, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி, வேம்பார், கன்னிராஜபுரம், நரிப்பையூர், செல்வனூர், மாரியூர் மற்றும் ஏர்வாடி பகுதிகளில் பனைமரங்கள் அதிக அளவில் உள்ளன. இதேபோல சிறைக்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட காமராஜபுரம் மற்றும் புதுநகர் பகுதியில் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பனைமரங்கள் உள்ளன. பல தலைமுறைகளாக பனைமரங்களை குத்தகைக்கு எடுத்து தொழில் செய்து வருகிறோம்.

தமிழகத்தில் பனைமரங்களின் பாதுகாப்பிற்காக தமிழக அரசு ரூ.6 ஆயிரம் கோடி ஒதுக்கியுள்ளது. இந்நிலையில் எங்கள் பகுதியில் உள்ள பனைமரங்களை திடீரென வெட்டியும், அகற்றியும் வருகின்றனர். இதனால் எங்களின் வாழ்வாதாரம் பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே பனைமரங்களை வெட்டி அகற்றுவதை தடுக்கவும், சம்பந்தப்பட்ேடார் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு சென்னை ஐகோர்ட்டு பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா, மதுரை ஐகோர்ட்டு நிர்வாக நீதிபதி மகாதேவன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

உரிய நடவடிக்கை

அப்போது மனுதாரர் வக்கீல் மலையேந்திரன் ஆஜராகி, ராமநாதபுரம் மாவட்டத்தில் பனை மரங்களை நம்பி ஏராளமானவர்கள் உள்ளனர். எனவே அவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு பனை மரங்களை பாதுகாக்க வேண்டும் என்று வாதாடினார்.

பின்னர் அரசு பிளீடர் திலக்குமார் ஆஜராகி, மனுதாரர் தெரிவிக்கும் பகுதியில் 344 பனை மரங்கள் வெட்டப்பட்டு உள்ளன. இந்த மரங்களை பறிமுதல் செய்ய நடவடிக்ைக எடுக்கப்பட்டுள்ளது. உரிய அனுமதியின்றி பனை மரங்களை வெட்டக் கூடாது என எச்சரிக்கப்பட்டுள்ளது. பனை மரங்களை முன் அனுமதியின்றி வெட்டியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட கலெக்டருக்கு பரமக்குடி தாசில்தார் சார்பில் பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது என்றார்.

இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், இந்த வழக்கில் மேல் உத்தரவு எதுவும் பிறப்பிக்க தேவையில்லை என்று கூறி, வழக்கை முடித்து வைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்