சாதி சான்றிதழ் வழங்கக்கோரி மிரட்டுபவர்கள் மீது நடவடிக்கை
சாதி சான்றிதழ் வழங்கக்கோரி மிரட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டரிடம் கிராம நிர்வாக அலுவலர்கள் முறையிட்டனர்.
திருப்பத்தூர் மாவட்ட தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் மாவட்ட தலைவர் மகேஷ் தலைமையில் கலெக்டர் பாஸ்கரபாண்டியனை சந்தித்து மனு அளித்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:
கடந்த சில காலமாக இந்து குறவன் சாதிசான்றிதழ் வழங்கக்கோரி கோரி வருவாய்த்துறை மூலம் மனுக்கள் அளிக்கப்பட்டு வருகின்றன. இந்த விவகாரத்தில் தகுந்த வழிகாட்டு நெறிமுறைகளை இதுவரை கோட்டாட்சியரோ தாசில்தாரோ கிராம நிர்வாக அலுவலர்களுக்கு வழங்காத நிலை உள்ளது.
இந்த நிலையில்தற்போது தமிழ் பழங்குடி குறவன் சங்க நிர்வாகிகள் கிராம நிர்வாக அலுவலர்களை செல்போன் மூலமாகவும் நேரிலும் மிரட்டல் விடுத்து வருகின்றனர். இதனால் எங்கள் உயிருக்கும் உடமைக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
எனவே இந்த சான்றிதழ்களை வழங்க முறையான வழிகாட்டு நெறிமுறைகளை வழங்க வேண்டும். மேலும் மிரட்டல் விடுக்கும் நிர்வாகிகள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் அந்த மனுவில் தெரிவித்து இருந்தனர். மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.