முக கவசம் அணியாத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை கலெக்டர் எச்சரிக்கை

முக கவசம் அணியாத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தேனி கலெக்டர் தெரிவித்தார்

Update: 2022-07-16 15:50 GMT

தேனி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் மீண்டும் பரவி வருகிறது. ஆண்டிப்பட்டி, பழனிசெட்டிபட்டி பகுதிகளில் தலா ஒரு பள்ளிக்கூடம் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மூடப்பட்டுள்ளது. இருப்பினும் பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் பலரும் முக கவசம் அணியாமல் பள்ளிக்கு வருவது தொடர்கதையாக உள்ளது. மாவட்ட கலெக்டர் முரளிதரன் சமீபகாலமாக பள்ளிகளில் ஆய்வு செய்யும் போதெல்லாம் ஆசிரியர்கள் முக கவசம் அணியாமல் பணியாற்றுவதை கண்டு அவர்களுக்கு அறிவுரை வழங்கி வந்தார்.

இருப்பினும் தொடர்ந்து முக கவசம் அணிய வேண்டும் என்ற அரசு உத்தரவை பொதுமக்களும், பள்ளி ஆசிரியர்களும் அலட்சியம் செய்து வந்ததால், முக கவசம் அணியாத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் முரளிதரன் நேற்று எச்சரிக்கை விடுத்தார். இதுதொடர்பாக கல்வித்துறை அதிகாரிகளுக்கு கலெக்டர் ஒரு உத்தரவிட்டுள்ளார். அனைத்து பள்ளி ஆசிரியர்களும் பள்ளிக்கு முக கவசம் அணிந்து வர வேண்டும், மாணவ, மாணவிகளை முக கவசம் அணிந்து வர அறிவுறுத்த வேண்டும், முக கவசம் அணியாத ஆசிரியர்களுக்கு அபராதம் விதிப்பதோடு துறைவாரியான நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்படும் என்பதை சுற்றறிக்கை வாயிலாக அறிவுறுத்த வேண்டும் என்றும் கல்வித்துறை அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்