ரேஷன் கடை விற்பனையாளர் மீது நடவடிக்கை

சீர்காழியில் தரமற்ற அரிசி விற்பனை செய்த ரேஷன் கடை விற்பனையாளர் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

Update: 2023-03-26 18:45 GMT

சீர்காழி:

சீர்காழியில் தரமற்ற அரிசி விற்பனை செய்த ரேஷன் கடை விற்பனையாளர் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

தரமற்ற அரிசி விற்பனை

சீர்காழி நகரில் உள்ள ரேஷன் கடைகளில் தரமற்ற அரிசி, கோதுமை உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் சீர்காழி பிடாரி வடக்கு வீதியில் உள்ள ஒரு ரேஷன் கடையில் குடும்ப அட்டைதாரர் ஒருவர் அரிசி வாங்கியுள்ளார்.

அந்த அரிசி முழுவதும் புழுக்கள் இருந்ததாக தெரிகிறது. இதுகுறித்து ரேஷன் கடைக்காரரிடம் கேட்டபோது அவர் சரியான பதில் அளிக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த குடும்ப அட்டைதாரர் தான் வாங்கிய அரிசியை ரேஷன் கடை முன்பு உள்ள சாலையில் கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டார்.

கலெக்டர் ஆய்வு

இந்நிலையில் நேற்று மாவட்ட கலெக்டர் மகாபாரதி சீர்காழி பகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது தரமற்ற அரிசி வழங்கிய ரேஷன் கடைக்கு சென்று அங்கே இருப்பு வைக்கப்பட்டுள்ள அரிசியை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தொடர்ந்து தரமற்ற அரிசியை வழங்கிய ரேஷன் கடை விற்பனையாளர் மீது துறை ரீதியான நடவடிக்கை உடனடியாக எடுக்க துணை பதிவாளருக்கு உத்தரவிட்டார். மேலும் புழுக்கள் நிறைந்த தரமற்ற 3 டன் அரிசி இருப்புகளை திரும்ப பெற்று நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்கு திருப்பி அனுப்ப அறிவுறுத்தினார்.

மீன் மார்க்கெட்

தொடர்ந்து சீர்காழி மீன் மார்க்கெட்டில் ஆய்வு மேற்கொண்டார். அங்கு நிலவும் சுகாதார சீர்கேட்டை பார்வையிட்ட அவர், நகராட்சி ஆணையர் வாசுதேவனை மீன் மார்க்கெட்டை சுகாதாரமாக பராமரிக்க அறிவுறுத்தினார்.

ஆய்வின்போது சீர்காழி நகர சபை தலைவர் துர்கா ராஜசேகரன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்