குழந்தைகளை வேலைக்கு சேர்த்தால் தொழில் நிறுவனங்கள் மீது நடவடிக்கை

குழந்தைகளை வேலைக்கு சேர்த்தால் தொழில் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் பிரபுசங்கர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2023-05-06 18:44 GMT

ஆலோசனை கூட்டம்

கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று பள்ளி செல்லா குழந்தைகளை கண்டறிந்து அவர்களை இந்த கல்வி ஆண்டு முதல் பள்ளியில் சேர்த்து கல்வி கற்பதற்கு நடவடிக்கை எடுப்பது தொடர்பான 3 அடுக்கு அமைப்பு கொண்ட குழு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

கொரோனா காலத்தில் ஊரடங்கு காரணமாக பள்ளிகள் மூடப்பட்டதாலும், கரூர் மாவட்டம் தொழில் நகரமாக இருப்பதாலும் குழந்தைகளை வேலைக்கு அனுப்புவது, குறிப்பிட்ட சதவீதம் பேர் படிப்பின் மீது ஆர்வம் இல்லாத காரணத்தாலும், படிப்பை பாதியில்நிறுத்தி நீண்ட நாட்கள் ஆனதாலும் பள்ளி செல்லா குழந்தைகளின் சதவீதம் கூடியிருப்பது கவலை அளிப்பதாக உள்ளது. கடந்த காலங்களில் பள்ளிக்கூடம் மணி அடிச்சாச்சு என்ற திட்டத்தின் கீழ் அதிக அளவிலான இடைநின்ற மாணவ, மாணவிகளை பள்ளியில் சேர்த்து படிக்க வைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மீதம் உள்ளவர்களை எப்படியாவது அவர்களை பள்ளியில் சேர்த்து படிக்க வைக்க வேண்டும் என்ற காரணத்திற்காக 3 அடுக்கு அமைப்பு கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

கவலை அளிக்கிறது

இந்தக் குழுவில் கடந்த காலங்களில் வருவாய் துறை, வளர்ச்சித் துறை, தொண்டு நிறுவனங்கள் பங்கு கொண்டு சிறப்பான பணியை செய்து வந்து இருக்கிறது. அதேபோல் இந்த ஆண்டும் அனைத்து துறையினரும் சிறப்பாக பணி மேற்கொண்டு பள்ளி செல்லா குழந்தைகளை கணக்கெடுத்து சமூக அக்கறையுடன் பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குறிப்பாக பள்ளிக்கு அனுப்புவது தொடர்பாக பெற்றோர்களுக்கும், பள்ளிக்கு செல்வது தொடர்பாக சிலமாணவ, மாணவிகளுக்கு ஆர்வமின்மையே காரணமாகசி உள்ளது. இதற்கு அடுத்ததாக வேலைக்கு சென்றால் குடும்பத்திற்கு சிறிய வருமானம் கிடைக்கும் என்ற மனப்பாங்கு சில பேருக்கு உள்ளது. இது மிகவும் கவலை அளிக்கக்கூடிய செயலாகும்.

கடும் நடவடிக்கை

இது போன்ற பெற்றோர்களையும் அவர்களின் குழந்தைகளையும் மனம் நலம் சார்ந்த ஆலோசனை கருத்துக்களை கூறி பள்ளிக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாத பெற்றோர்கள் மீதும், அவர்களை வேலைக்கு சேர்த்துக் கொள்ளும் தொழில் நிறுவனங்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் குழந்தை தொழிலாளர்கள் பணி அமர்த்தப்பட்டு இருந்தால் 89033 31098 அல்லது 1098 என்ற தொலைபேசி எண்ணிற்கு பொதுமக்கள் தகவல் அளிக்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் அனைத்து வருவாய் வட்டாட்சியர்கள், அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள், 17 பேர் கொண்ட குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்