பொதுமக்களுக்கு கடன் வழங்காத கூட்டுறவு சங்க அதிகாரிகள் மீது நடவடிக்கை அமைச்சர் மனோ தங்கராஜ் எச்சரிக்கை

பொதுமக்களுக்கு கடன் உதவி வழங்குவதில் இலக்கை எட்டாத கூட்டுறவு சங்க அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2022-06-04 17:48 GMT

நாகர்கோவில்:

பொதுமக்களுக்கு கடன் உதவி வழங்குவதில் இலக்கை எட்டாத கூட்டுறவு சங்க அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஆலோசனை கூட்டம்

குமரி மாவட்ட கூட்டுறவுத்துறை அதிகாரிகள் மற்றும் சங்க செயலாளர்களுடனான ஆலோசனை கூட்டம் நேற்று நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில் நடைபெற்றது. கலெக்டர் அரவிந்த் தலைமை தாங்கினார். மாநகராட்சி மேயர் மகேஷ் முன்னிலை வகித்தார். தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

குமரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு சங்கங்களின் செயல்பாடுகள் மோசமான நிலையில் உள்ளன. கூட்டுறவு சங்கம் மூலமாக என்னென்ன கடன் உதவிகள் வழங்கப்படுகிறது என்பதை உறுப்பினர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். உறுப்பினர்கள் தெரிந்து கொள்ளும் வகையில் வங்கிகளின் நோட்டீஸ் போர்டுகளில் கடன் உதவி தொடர்பான விவரங்களை எழுதி வைத்திருக்க வேண்டும்.

நகைக்கடன் வழங்கும் போது...

விவசாயிகளுக்கு தடையின்றி உரம் வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கூட்டுறவு சங்கங்களின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் ரேஷன் கடைகளில் சரியான நேரத்தில் ஊழியர்கள் வருவதில்லை என்று புகார்கள் வருகின்றன.

ஒரு சில வங்கிகளில் கடன் உதவி வழங்கிய தேதிக்கு முன்னதாக தேதியை குறிப்பிட்டு கடன் வழங்குவதாக புகார்கள் வந்துள்ளன. எப்போது கடனுதவி வழங்கப்படுகிறதோ அன்றைய தேதியைக் குறிப்பிட வேண்டும். அவ்வாறு முன் கூட்டி தேதி குறிப்பிடும் போது விவசாயிகள் முன்கூட்டியே அந்த கடனை செலுத்த வேண்டிய நிலை வரும். இந்த தவறு நடக்காமல் இனிவரும் காலங்களில் பார்த்துக் கொள்ள வேண்டும்.

அதிகாரிகள் மீது நடவடிக்கை

நகை கடன் தள்ளுபடி செய்யப்பட்ட பயனாளிகளின் விவரம் ஏற்கனவே கூட்டுறவு சங்கங்களுக்கு அனுப்பப்பட்டு உள்ளது. ஆனால் ஒரு சிலர் கூட்டுறவு சங்கங்களில் நகை கடன் தள்ளுபடி செய்யப்பட்ட பிறகும் பயனாளிகளுக்கு வழங்கப்படவில்லை என புகார்கள் உள்ளன. அதை ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் கடன் வழங்க வேண்டும். 3-ம் பாலினத்தவர்களிடம் கடன் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பொதுமக்களுக்கு கடனுதவிகள் வழங்குவதில் இலக்கினை எட்டாத கூட்டுறவு சங்க அதிகாரிகள் மீது எந்தவித சமரசமும் இன்றி நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி சிவப்பிரியா, கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் சந்திரசேகரன், திட்ட இயக்குனர் (மகளிர் திட்டம்) மைக்கேல் அந்தோணி பெர்னான்டோ, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அதிகாரி ஹரிதாஸ் மற்றும் பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

ஏ.டி.எம். எந்திரம் திறப்பு

முன்னதாக குமரி மாவட்ட கூட்டுறவுத்துறை சார்பில் நாகர்கோவில் இளங்கடையில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கியின் தானியங்கி பணம் பட்டுவாடா செய்யும் எந்திரத்தை (ஏ.டி.எம். எந்திரம்) அமைச்சர் மனோ தங்கராஜ் திறந்து வைத்து பயனாளிகளுக்கு கடன் உதவி வழங்கி பேசினார்.

நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் சந்திரசேகரன், மாநகராட்சி துணை மேயர் மேரி பிரின்சி லதா மற்றும் துணைப்பதிவாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

---

Tags:    

மேலும் செய்திகள்