மே தினத்தில் விடுமுறை அளிக்காத 29 நிறுவனங்கள் மீது நடவடிக்கை
மே தினத்தில் விடுமுறை அளிக்காத 29 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தொழிலாளர் தினமான மே 1-ந்தேதி தேசிய விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம், அனைத்து நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாைலகளில் பணிபுரியும் பணியாளர்களுக்கு தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள் (தேசிய பண்டிகை மற்றும் சிறப்பு விடுமுறைகள்) சட்டத்தின் கீழ், சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும். அத்தியாவசிய பணிகளுக்காக பணியாற்றும் பணியாளர்களுக்கு, இரட்டிப்பு சம்பளம் அல்லது 3 நாட்களுக்கு மாற்று விடுமுறை அளிப்பதற்கு சம்பந்தப்பட்ட நிறுவனம் சார்பில் முன் அறிவிப்பு செய்ய வேண்டும். இந்த நிலையில் சென்னை தொழிலாளர் ஆணையரின் உத்தரவின்படியும், திருச்சி மண்டல கூடுதல் மற்றும் இணை ஆணையரின் அறிவுறுத்தல்படியும், பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் கா.மூர்த்தி தலைமையில் தொழிலாளர் நலத்துறை அலுவலர்கள் பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் உணவு விடுதிகள், கடைகள், தொழில்கூடங்கள் என 52 வணிக நிறுவனங்களில் கள ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, 15 உணவகங்கள் உள்பட 29 வணிக நிறுவனங்கள் நிபந்தனைகளை மீறி விடுமுறை வழங்காதது கண்டறியப்பட்டது. இதையடுத்து, விதிமுறைகளை மீறிய நிறுவனங்கள் மீது தொழிலாளர் நலத்துறை அலுவலர்கள் அபராதம் விதித்து குற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக உதவி ஆணையர் தெரிவித்தார்.