தூத்துக்குடி மாவட்டத்தில் 23 கடை உரிமையாளர்கள் மீது நடவடிக்கை

தூத்துக்குடி மாவட்டத்தில் பொட்டல பொருட்கள் விதியை மீறிய 23 கடை உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக தொழிலாளர் உதவி ஆணையர் க.திருவள்ளுவன் தெரிவித்துள்ளார்.

Update: 2023-01-31 18:45 GMT

தூத்துக்குடி மாவட்டத்தில் பொட்டல பொருட்கள் விதியை மீறிய 23 கடை உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக தொழிலாளர் உதவி ஆணையர் க.திருவள்ளுவன் தெரிவித்துள்ளார்.

ஆய்வு

தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டமுறை எடையளவு சட்டம் மற்றும் பொட்டல பொருட்கள் விதிகளின் கீழ் தொழிலாளர் உதவி ஆணையர் க.திருவள்ளுவன் தலைமையில் தொழிலாளர் துணை ஆய்வாளர்கள் ஆறுமுகம், ராம்மோகன், உதவி ஆய்வாளர்கள் ஹெர்மஸ் மஸ்கர்னாஸ், பிரேம்குமார், ஜோதிலட்சுமி முத்திரை ஆய்வாளர் ஜெனட், சமுத்திரவேலு ஆகியோர் அடங்கிய குழுவினர் தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகள், கோவில்பட்டி, புதியம்புத்தூர், ஆத்தூர் ஆகிய பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர். அந்த பகுதிகளில் உள்ள நகைக்கடைகள், மளிகை கடைகள், பல்பொருள் அங்காடி, காய்கறி கடைகள், மீன் மார்க்கெட், இறைச்சி கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர்.

உரிமையாளர் மீது நடவடிக்கை

அப்போது முறையாக முத்திரையிட்டு சான்று பெறாத மின்னணு தராசுகள் பறிமுதல் செய்யப்பட்டன. பொட்டல பொருட்கள் விதிகளின்படி பொட்டல பொருட்களின் தயாரிப்பாளர், பொட்டலமிடுபவர்கள் மற்றும் பொருட்களை இறக்குமதி செய்து விற்பனை செய்யும் நிறுவனங்கள் பதிவுச்சான்று பெறாமலும், பொட்டல பொருட்களில், அதன் தயாரிப்பாளர், இறக்குமதியாளர் பெயர், முழு முகவரி தயார் செய்த தேதி, அதன் எடை மற்றும் அதிகபட்ச சில்லறை விற்பனை விலை ஆகியவை இன்றி விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்த பொட்டல பொருட்கள் கைப்பற்றப்பட்டன. இது தொடர்பாக 23 கடைகள் மற்றும் நிறுவனங்களின் உரிமையாளர்களின் மீது சட்டப்படி மேல் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

புகார் தெரிவிக்கலாம்

மேலும் எந்தவொரு பொட்டல பொருளிலும் அதன் தயாரிப்பாளர், இறக்குமதியாளர் பெயர், முகவரி, பொருளின் பெயர், தயாரித்த மாதம், வருடம், அதன் எடை மற்றும் அதிகபட்ச சில்லறை விற்பனை விலை ஆகிய குறிப்புகள் இன்றி விற்பனை செய்யக்கூடாது. நிர்ணயிக்கப்பட்ட சில்லறை விற்பனை விலையை விட கூடுதல் விலைக்கு பொட்டல பொருட்களை விற்பனை செய்யக்கூடாது. எடையளவு கருவிகளுக்கு முறையாக சான்று பெற வேண்டும். சான்று பெறாத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மேற்கண்ட விதிகளை மீறும் நிறுவனங்கள் தொடர்பான புகார்களை தூத்துக்குடி மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) அலுவலகத்தின் 0461-2340443 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம் என்று தூத்துக்குடி மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) க.திருவள்ளுவன் தெரிவித்து உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்