திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆச்சார்ய உற்சவம்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆச்சார்ய உற்சவம் நடந்தது.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணி திருவிழா கடந்த 17-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழா காலங்களில் தினசரி காலை மற்றும் மாலையில் சுவாமியும், அம்பாளும் வெவ்வொரு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தனர். இதையடுத்து, நேற்று காப்பு கட்டிய ஹரிஹர சுப்பிரமணிய பட்டருக்கு கோவில் சார்பில் மரியாதை செலுத்தும் வகையில் ஆச்சார்ய உற்சவம் நடந்தது. நிகழ்ச்சியில், காப்பு கட்டிய பட்டர் கோவிலில் இருந்து யானை மீது அமர்ந்தவாறு ஸ்தானத்தார் சபைக்கு அழைத்து வரப்பட்டார். நிகழ்ச்சியில், கோவில் கண்காணிப்பாளர் ஆனந்தராஜ், உதவி பாதுகாப்பு அலுவலர் ராமச்சந்திரன், மணியம் சங்கரன், சதாசிவம் மற்றும் கோவில் பணியாளர்கள், ஸ்தானத்தார் சபையினர் கலந்து கொண்டனர்.