அச்சன்கோவில் ஆபரண பெட்டி 16-ந் தேதி தென்காசி வருகை; சிறப்பான வரவேற்பு அளிக்க பக்தர்கள் முடிவு
அச்சன்கோவில் ஆபரண பெட்டி 16-ந் தேதி தென்காசி வருகிறது. இதையொட்டி நடந்த ஆலோசனை கூட்டத்தில் ஆபரண பெட்டிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க பக்தர்கள் முடிவு செய்தனர்.
தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் இருந்து சுமார் 35 கி.மீ. தூரத்தில் கேரள மாநிலம் அச்சன்கோவில் உள்ளது. இங்கு பிரசித்தி பெற்ற அய்யப்பன் கோவில்களில் ஒன்றான தர்ம சாஸ்தா அய்யப்பன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் மண்டல மகோற்சவ விழா 10 நாட்கள் நடைபெறும். இதனை முன்னிட்டு அய்யப்பனுக்கு விலை உயர்ந்த ஆபரணங்கள் அணிவிக்கப்படும். இந்த ஆபரண பெட்டி கேரள மாநிலம் புனலூர் அரசு கருவூலத்தில் இருந்து ஊர்வலமாக எடுத்து வரப்படும். அப்போது தென்காசி காசி விஸ்வநாத சுவாமி கோவில் முன்பு பக்தர்களால் வரவேற்பு அளிக்கப்படும்.
இந்த ஆண்டு வருகிற 16-ந் தேதி தென்காசிக்கு ஆபரண பெட்டி வருகிறது. இதுதொடர்பான ஆலோசனை கூட்டம் புனலூர் திருவிதாங்கூர் தேவஸ்தான போர்டு அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கேரள மாநில தேவசம் போர்டு உதவி ஆணையர் ஆர்.கே.நாயர் தலைமை தாங்கினார் அச்சன்கோவில், ஆரியங்காவு, கிருஷ்ணன் கோவில், பரணிக்காவு, புனலூர் சிவன் கோவில் ஆகியவற்றின் நிர்வாக அதிகாரிகள், கோவில் கமிட்டி நிர்வாகிகள், தென்காசி ஆபரண பெட்டி வரவேற்பு கமிட்டி தலைவர் ஏ.சி.எஸ்.ஜி ஹரிஹரன், அய்யப்ப சேவா சங்க செயலாளர் மாடசாமி, ஆலோசகர் கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் ஆபரண பெட்டிக்கு அனைத்து இடங்களிலும் சிறப்பான வரவேற்பு அளிப்பது என்றும், இதனால் வழக்கமாக காலை 11 மணிக்கு தொடங்கும் ஊர்வலம் முன்னதாக காலை 9.30 மணிக்கு தொடங்கவும் முடிவு செய்யப்பட்டது.