செங்கல்பட்டில் மாணவியை அடித்ததாக குற்றச்சாட்டு - தனியார் பள்ளி முன்பு பெற்றோர் தர்ணா

மாற்றுச் சான்றிதழ் வழங்காததைக் கண்டித்து மாணவியின் தந்தை முரளிதரன் பள்ளியின் முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.

Update: 2023-07-01 17:16 GMT

செங்கல்பட்டு,

செங்கல்பட்டு மாவட்டம் கிருஷ்ணா நகரைச் சேர்ந்த முரளிதரன் என்பவரது மகள் ஜனவர்ஷினி. இவர் பழவேலியில் உள்ள தனியார் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தார். அங்கு ஆசிரியராக உள்ள ஷாலினி என்பவர் மாணவி ஜனவர்ஷினியிடம் கண்டிப்பாக நடந்து கொண்டதாகவும், மாணவியை அடித்ததாகவும் கூறப்படுகிறது.

இதையடுத்து மாணவியின் பெற்றோர் மாற்றுச் சான்றிதழ் வழங்குமாறு கேட்டதாகவும், பள்ளி நிர்வாகம் மாற்றுச் சான்றிதழை வழங்காமல் இருந்து வந்ததாகவும் தெரிகிறது. இந்நிலையில் மாற்றுச் சான்றிதழ் வழங்காததைக் கண்டித்து மாணவியின் தந்தை முரளிதரன் பள்ளியின் முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.

சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் பள்ளி நிர்வாகத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி மாணவிக்கு மாற்று சான்றிதழை வழங்குமாறு அறிவுறுத்தினர். அதே சமயம் அனைத்து பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை முடிந்து விட்டதால், மாவட்ட கலெக்டர் ராகுல்நாத்தை சந்தித்து அவரிடம் நடந்தவற்றைக் கூறி மாற்றுச் சான்றிதழை பெற்றுக் கொள்வதாகவும், வேறு பள்ளியில் மாணவியை சேர்க்க நடவடிக்கை எடுக்குமாறு கலெக்டரிடம் மனு அளிக்க உள்ளதாகவும் பெற்றோர் தெரிவித்தனர்.


Full View

 

Tags:    

மேலும் செய்திகள்