வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு: அமைச்சர் கீதாஜீவன் உள்பட 5 பேர் விடுதலை

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் அமைச்சர் கீதாஜீவன் உள்பட 5 பேரை விடுதலை செய்து தூத்துக்குடி கோர்ட்டு நேற்று தீர்ப்பு கூறியது.

Update: 2022-12-14 18:45 GMT

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் அமைச்சர் கீதாஜீவன் உள்பட 5 பேரை விடுதலை செய்து தூத்துக்குடி கோர்ட்டு நேற்று தீர்ப்பு கூறியது.

சொத்து சேர்த்ததாக வழக்கு

தூத்துக்குடி மாவட்ட தி.மு.க. செயலாளராக பதவி வகித்தவர் என்.பெரியசாமி. இவர் கடந்த 1996-ம் ஆண்டு முதல் 2001 வரை தூத்துக்குடி தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்தார்.

அந்த காலக்கட்டத்தில் என்.பெரியசாமி தனது பெயரிலும், குடும்பத்தினர் பெயரிலும் வருமானத்துக்கு அதிகமாக ரூ.2 கோடியே 31 லட்சத்து 87 ஆயிரம் மதிப்பிலான சொத்துக்களை சேர்த்ததாக புகார் கூறப்பட்டது.

இதுதொடர்பாக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசார் கடந்த 2002-ம் ஆண்டு என்.பெரியசாமி, அவரது மனைவி எபனேசரம்மாள், மகன்கள் ராஜா, ஜெகன் பெரியசாமி, மகள் கீதாஜீவன், மருமகன் ஜீவன் ஜேக்கப் ராஜேந்திரன் ஆகிய 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை தூத்துக்குடி மாவட்ட முதன்மை கோர்ட்டில் நடந்து வந்தது.

அமைச்சர் கீதாஜீவன்

இதற்கிடையே, என்.பெரியசாமி கடந்த 2017-ம் ஆண்டு மே மாதம் உடல்நலக்குறைவு காரணமாக இறந்துவிட்டார். அவரது மகள் கீதாஜீவன் தற்போது சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சராகவும், மகன் ஜெகன் பெரியசாமி தூத்துக்குடி மாநகராட்சி மேயராகவும் உள்ளனர்.

இந்த நிலையில் சுமார் 20 ஆண்டுகளாக நடந்த இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. இதற்காக அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி, எபனேசரம்மாள், ராஜா, ஜீவன் ஜேக்கப் ராஜேந்திரன் ஆகிய 5 பேரும் நேற்று காலையில் கோர்ட்டில் ஆஜரானார்கள்.

வழக்கை விசாரித்த நீதிபதி ஆர்.குருமூர்த்தி, 5 பேர் மீதான குற்றச்சாட்டுகள் போதிய ஆதாரங்களுடன் நிரூபிக்கப்படவில்லை எனக் கூறி கீதாஜீவன், ஜெகன் பெரியசாமி உள்ளிட்ட 5 பேரையும் விடுதலை செய்து உத்தரவிட்டார்.

நீதி வென்றது

பின்னர் கோர்ட்டில் இருந்து வெளியே வந்த அமைச்சர் கீதாஜீவன் நிருபர்களிடம் கூறியதாவது:-

எனது தந்தை பெரியசாமி 1996 முதல் 2001 வரை சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். பின்னர் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து அ.தி.மு.க. அரசு அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக எங்களுக்கு அவப்பெயரை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த வழக்கை தொடர்ந்தனர்.

ஆனால், இந்த வழக்கில் தற்போது நீதி வென்றுள்ளது. எங்களுக்கு நியாயம் கிடைத்து உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்