மாவட்டத்தில் கட்டாய கல்வி உரிமைச்சட்டத்தின் படி 4035 இடங்களுக்கு மாணவ, மாணவிகள் தேர்வு

மதுரை மாவட்டத்தில் கட்டாய கல்வி உரிமைச்சட்டத்தின் படியான மாணவர் சேர்க்கைக்காக நேற்று நடந்த குலுக்கலில் 4035 இடங்களுக்கு மாணவ, மாணவிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

Update: 2023-05-23 20:46 GMT


மதுரை மாவட்டத்தில் கட்டாய கல்வி உரிமைச்சட்டத்தின் படியான மாணவர் சேர்க்கைக்காக நேற்று நடந்த குலுக்கலில் 4035 இடங்களுக்கு மாணவ, மாணவிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

குலுக்கல்

தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில், மதுரை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச்சட்டம் 2009 பிரிவு12 (1) (c) -ன் படி அனைத்து சிறுபான்மையற்ற தனியார் பள்ளிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் எல்.கே.ஜி. மாணவர் சேர்க்கையில் 25 சதவீத இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் சேர்க்கை நடத்தப்படுகிறது. எல்.கே.ஜி. இல்லாத பள்ளிகளில் 1-ம் வகுப்புக்கான நேரடி சேர்க்கை அனுமதிக்கப்படுகிறது. இதற்காக மாவட்டம் முழுவதும் 399 தனியார் மழலையர் மற்றும் ஆரம்பப்பள்ளிகளில் 4035 இடங்களுக்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் கடந்த 18-ந் தேதி வரை பெறப்பட்டன.

இதையடுத்து 9269 விண்ணப்பங்கள் கட்டாய கல்வி உரிமைச்சட்டத்தின் படி தனியார் பள்ளிகளில் சேர்ப்பதற்காக பெறப்பட்டது. இதில் 142 விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு பிறகு தகுதிநீக்க அடிப்படையில் நிராகரிக்கப்பட்டன. அதனை தொடர்ந்து, மாணவர் சேர்க்கைக்கான குலுக்கல் அந்தந்த பள்ளிகளில் நேற்று தொடங்கியது. இந்த பணிகளை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் கார்த்திகா தொடங்கி வைத்தார். தனியார் பள்ளிகளுக்கான கல்வி அலுவலர் கோகிலா தலைமையிலான கல்வித்துறை அலுவலர்கள் அந்தந்த பள்ளிகளில் நடந்த மாணவர் சேர்க்கை குலுக்கலில் கலந்து கொண்டனர்.

மாணவர் சேர்க்கை

அதன்படி நேற்றைய குலுக்கலில் அனைத்து மாணவ, மாணவிகளுக்கு சேர்க்கை வழங்கப்பட்டது. இதில், ஒரு மாணவர் 5 பள்ளிகள் வரை விண்ணப்பிக்க வாய்ப்புள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட மாணவ, மாணவிகள் விண்ணப்பித்திருந்த ஆரம்பப்பள்ளிகள் எத்தனை, மெட்ரிகுலேசன் பள்ளிகள் எத்தனை என்ற விவரங்கள் 2 நாட்களுக்குள் தெரியவரும்.

ஒரு சில மாணவ, மாணவிகளின் பெற்றோர் நேற்றைய குலுக்கலில் 2 மற்றும் 3 பள்ளிகளை தேர்ந்தெடுக்க வாய்ப்புள்ளது. எனவே, பெற்றோர்கள் எந்த பள்ளியை இறுதி செய்கின்றனரோ அந்த பள்ளியில் மாணவருக்கான சேர்க்கை உறுதி செய்யப்படும். காலியாக உள்ள இடங்கள் காத்திருப்போர் பட்டியலில் உள்ள மாணவ, மாணவிகளுக்கு மீண்டும் குலுக்கல் முறையில் சேர்க்கை நடத்தப்படும். 

Tags:    

மேலும் செய்திகள்