சென்னை ஐகோர்ட்டு உத்தரவின்பேரில் ஈரோடு சுதா ஆஸ்பத்திரிக்கு வைக்கப்பட்ட 'சீல்' அகற்றம்
ஆஸ்பத்திரிக்கு வைக்கப்பட்ட ‘சீல்’ அகற்றம்
சென்னை ஐகோர்ட்டு நீதிபதி உத்தரவின்பேரில் ஈரோடு சுதா ஆஸ்பத்திரிக்கு வைக்கப்பட்ட 'சீல்' அகற்றப்பட்டது.
ஸ்கேன் மையத்துக்கு 'சீல்'
ஈரோடு சுதா மகப்பேறு மற்றும் கருத்தரித்தல் ஆஸ்பத்திரியில் 16 வயது சிறுமியிடம் கருமுட்டைகளை எடுத்து விற்பனை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதன்பேரில் அந்த ஆஸ்பத்திரியில் ஸ்கேன் யைத்துக்கு 'சீல்' வைக்கப்பட்டது. மேலும் அந்த ஆஸ்பத்திரியில் புதிதாக நோயாளிகளை அனுமதிக்கக்கூடாது. சிகிச்சை பெற்று வரும் உள்நோயாளிகளை 15 நாட்களில் 'டிஸ்சார்ஜ்' செய்ய வேண்டும்.
கருத்தரித்தல் ஆஸ்பத்திரியின் பதிவு தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது என்று தமிழக அரசு உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து கடந்த 15-ந்தேதி சுதா ஆஸ்பத்திரியில் 5 ஸ்கேன் கருவிகள் மற்றும் அதற்கான அறைகள் 'சீல்' வைக்கப்பட்டது. இந்த உத்தரவை எதிர்த்து சுதா ஆஸ்பத்தரி நிர்வாகம் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
ஐகோர்ட்டு நீதிபதி உத்தரவு
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, 'குற்றச்சாட்டு குறித்து ஆஸ்பத்திரி தரப்பில் விளக்கமளிக்க அவகாசம் வழங்கி, விதிமீறல் இருப்பது உறுதி செய்யப்பட்டால் மட்டுமே, அதன் பதிவை தற்காலிகமாக ரத்து செய்ய முடியும். ஆனால் என்ன காரணத்துக்காக பதிவு தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது என்பதையும், தமிழ்நாடு அரசு விளக்கம் அளிக்கவில்லை.
எனவே ஆஸ்பத்திரி நிர்வாகத்திற்கு எதிராக தமிழ்நாடு அரசு பிறப்பித்துள்ள உத்தரவை ரத்து செய்கிறேன். ஸ்கேன் மையத்துக்கு வைக்கப்பட்டு உள்ள 'சீல்' அகற்றப்பட வேண்டும். எனவே சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆஸ்பத்திரி நிர்வாகத்துக்கு போதிய அவகாசம் வழங்கி 12 வாரங்களுக்குள் இறுதி உத்தரவை பிறப்பிக்க வேண்டும்' என்று உத்தரவிட்டார்.
'சீல்' அகற்றம்
இந்த நிலையில் சென்னை ஐகோர்ட்டு நீதிபதி உத்தரவின்படி, ஈரோடு சுதா ஸ்கேன் மையத்துக்கு வைக்கப்பட்ட 'சீல்' அகற்றுவதற்காக ஈரோடு மாவட்ட மருத்துவம் மற்றும் நலப்பணிகள் இணை இயக்குனர் பிரேமகுமாரி, தாசில்தார் பாலசுப்பிரமணியம் ஆகியோர் நேற்று சுதா மருத்துவமனைக்கு சென்றனர்.
பின்னர் 5 ஸ்கேன் கருவிகள் மற்றும் அதற்கான அறைகளில் வைக்கப்பட்டு இருந்த 'சீல்' அகற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து சுதா ஸ்கேன் மையம் வழக்கம்போல் செயல்பட தொடங்கியது.