அரூர் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்; விவசாயி உள்பட 2 பேர் பலி
அரூர் அருேக மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் விவசாயி உள்பட 2 பேர் பலியானார்கள்.
அரூர்:
புதுமனை புகுவிழா
தர்மபுரி மாவட்டம், அரூரை அடுத்த அதிகாரப்பட்டி புங்கபள்ளம் கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 43), விவசாயி. இவருடைய மனைவி பிரபாவதி. இவர்களுக்கு கார்முகிலன் என்ற மகனும், நித்திஷ்கா என்ற மகளும் உள்ளனர்.
நேற்று முன்தினம் ரமேஷ் குடும்பத்துடன் தனது தங்கையின் புதுமனை புகுவிழாவிற்காக அரூருக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார்.
பின்னர் புதுமனை புகுவிழா முடிந்து நேற்று அதிகாலை ரமேஷ் தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் மோட்டார் சைக்கிளில் ஊருக்கு புறப்பட்டார்.
மோட்டார் சைக்கிள்கள் மோதல்
கோபிநாதம்பட்டி கூட்ரோட்டை கடந்து காலை 6.30 மணியளவில் வந்து கொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக புது கொக்காரப்பட்டியில் இருந்து பிரபு (31) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் எதிரே வந்தது. இந்த இரு மோட்டார் சைக்கிள்களும் கண்ணிமைக்கும் நேரத்தில் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த ரமேசும், அவருடைய குடும்பத்தினரும் மற்றும் பிரபுவும் படுகாயம் அடைந்தனர். பின்னர் அவர்கள் அனைவரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அங்கிருந்து அரூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்ததில் பிரபு இறந்துவிட்டது தெரியவந்தது.
பின்னர் ரமேஷ் மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ரமேசும் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். அதேநேரத்தில் பிரபாவதி மற்றும் அவரது குழந்தைகளுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து ரமேஷின் தந்தை பொன்னுசாமி கொடுத்த புகாரின் பேரில் கோபிநாதம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) பாஸ்கர்பாபு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.