மோட்டார் சைக்கிள் மீது சுற்றுலா வேன் மோதல்; கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் பலி

செம்பட்டி அருகே மோட்டார் சைக்கிள் மீது சுற்றுலா வேன் மோதிய விபத்தில் கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் பலியாகினர்.

Update: 2023-06-02 21:00 GMT

செம்பட்டி அருகே மோட்டார் சைக்கிள் மீது சுற்றுலா வேன் மோதிய விபத்தில் கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் பலியாகினர்.

கல்லூரி மாணவர்

திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே உள்ள ராமநாதபுரத்தைச் சேர்ந்த முருகேசன் மகன் கபில் கண்ணன் (வயது 23). இவர் மதுரையில் உள்ள காமராஜர் பல்கலைக்கழகத்தில் விடுதியில் தங்கி பி.ஏ. 3-ம் ஆண்டு படித்து வந்தார். அதே ஊரை சேர்ந்த சத்யா மகன் கோபி (23). இவர் திருப்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவர்கள் 2 பேரும் உறவினர்கள் ஆவர்.

ராமநாதபுரத்தில் கடந்த 3 நாட்களாக பகவதியம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழாவை பார்ப்பதற்காக கபில் கண்ணன் மதுரையில் இருந்தும், கோபி திருப்பூரில் இருந்தும் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தங்களது சொந்த ஊருக்கு வந்திருந்தனர்.

2 பேர் பலி

இந்தநிலையில் நேற்று மாலை கபில் கண்ணனும், கோபியும் ஒரே மோட்டார் சைக்கிளில் தருமத்துப்பட்டிக்கு சென்றனர். பின்னர் அங்கிருந்து ராமநாதபுரம் நோக்கி வந்து கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை கபில் கண்ணன் ஓட்டினார்.

ராமநாதபுரம் அருகே அவர்கள் வந்தபோது, எதிரே வந்த சுற்றுலா வேன் ஒன்று எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கிவீசப்பட்ட கபில் கண்ணனும், கோபியும் படுகாயம் அடைந்தனர். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி 2 பேரும் பரிதாபமாக இறந்தனர்.

இதுகுறித்து செம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் 2 வாலிபர்கள் பலியான சம்பவம் ராமநாதபுரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. 

Tags:    

மேலும் செய்திகள்