பரமத்தியில் மோட்டார் சைக்கிள்கள் மோதல்; 2 வாலிபர்கள் பலி-2 பேர் படுகாயம்
பரமத்திவேலூர்:
பரமத்தியில் மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதில் 2 வாலிபர்கள் பலியாகினர். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
நண்பர்கள்
நாமக்கல் மாவட்டம் பரமத்தி இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமை சேர்ந்தவர்கள் ஸ்டீபன் (வயது 24), கீதன் (24). நண்பர்களான இவர்கள் 2 பேரும் நேற்று இரவு பரமத்தி பஜார் பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் சென்றனர். பின்னர் அவர்கள் வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை ஸ்டீபன் ஓட்டி சென்றார்.
ஸ்டீபன் பரமத்தியில் இருந்து திருச்செங்கோடு செல்லும் சாலையின் எதிர் திசையில் மோட்டார் சைக்கிளை ஓட்டி சென்றார். அப்போது பரமத்தி வாய்க்கால் பாலம் அருகே எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் மீது, ஸ்டீபன் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் மோதியது.
2 பேர் பலி
இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்டு ஸ்டீபன், கீதம் மற்றும் மற்றொரு மோட்டார் சைக்கிள் வந்த வாலிபர்களான முருகன், வடிவேல் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இதில் ஸ்டீபன் மற்றும் முருகன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிபாதமாக இறந்தனர்.
அந்த வழியாக சென்றவர்கள் கீதன், முருகனை மீட்டு சிகிச்சைக்காக நாமக்கல்லில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்கள் 2 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விசாரணை
விபத்து குறித்து தகவல் அறிந்த பரமத்தி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அவர்கள் ரத்த வெள்ளத்தில் கிடந்த ஸ்டீபன், முருகன் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
பரமத்தியில் மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 2 வாலிபர்கள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.