ஆத்தூர் அருகே சரக்கு வாகனம் மோதி பள்ளி மாணவன் சாவு-ஒரே மகனை இழந்த அதிர்ச்சியில் தாய் மயக்கம் போட்டு விழுந்ததால் பரபரப்பு

ஆத்தூர் அருகே சரக்கு வாகனம் மோதி பள்ளி மாணவன் பலியானான். ஒரே மகனை இழந்த அதிர்ச்சியில் தாய் மயக்கம் போட்டு விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-04-01 23:12 GMT

ஆத்தூர்:

9-ம் வகுப்பு மாணவன்

ஆத்தூர் அருகே நரசிங்கபுரம் ஜெ.ஜெ. நகர் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். இவர், ஆத்தூர் ராசிபுரம் பிரிவு ரோட்டில் வாகனங்களுக்கு ரேடியேட்டர் பழுது பார்க்கும் பட்டறை நடத்தி வருகிறார். இவருடைய மனைவி சித்ரா, தலைவாசல் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து வருகிறார். இவர்களது ஒரே மகன் சம்பரிஷ் (வயது14). இவர், ஆத்தூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தான்.

நேற்று மதியம் சம்பரீஷ் தன்னுடைய தந்தை சுரேஷின் மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு ஆத்தூர்- சேலம் சாலையில் சென்று கொண்டிருந்தான். அப்போது சரக்கு வாகனம் சம்பரீஷ் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த சம்பரீஷ் ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டான்.

ஆஸ்பத்திரியில் சாவு

அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக சேலத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டான். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்தான்.

தகவல் அறிந்த ஆத்தூர் போலீசார் விரைந்து வந்தனர். மாணவன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

அதிர்ச்சியில் தாய் மயக்கம்

இதற்கிடையே மாணவன் இறந்த தகவலை கேட்டு அதிர்ச்சி அடைந்த தாய் சித்ரா மயக்கம் போட்டு விழுந்தார். இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் மாணவனின் உடல் உறுப்புகளை தானம் செய்ய பெற்றோர் முடிவு எடுத்ததாகவும், அதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.

மாணவன் பலியான சம்பவம் ஆத்தூர் பகுதியில் பெரும் சோகத்தை உண்டாக்கியது.

மேலும் செய்திகள்