தர்மபுரி:
தர்மபுரி மாவட்டம் லளிகம் பகுதியை சேர்ந்தவர் ஜெயம் (வயது 45). நெசவுத் தொழில் செய்து வருகிறார். இவர் தனது மனைவி குமுதாவுடன் தர்மபுரிக்கு மோட்டார் சைக்கிளில் வந்தார். அங்கு பணிகளை முடித்த பின் மீண்டும் மோட்டார் சைக்கிளில் ஊருக்கு சென்று கொண்டிருந்தார். அன்னசாகரம் பகுதியில் சென்ற போது சாலையோரத்தில் உள்ள ஒரு தோப்பில் வாழை மரத்தை வெட்டிக் கொண்டிருந்தனர். அப்போது ஜெயம் மோட்டார் சைக்கிளில் வருவது தெரியாமல் வாழை மரம் வெட்டி சாய்க்கப்பட்டது. அந்த மரம் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த ஜெயம் மற்றும் அவருடைய மனைவி மீது விழுந்தது. இதனால் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த 2 பேருக்கும் காயம் ஏற்பட்டது. அந்த பகுதியில் இருந்தவர்கள் 2 பேரையும் மீட்டு தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இது தொடர்பாக ஜெயம் மதிகோன்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தினார்கள். இதைத்தொடர்ந்து சம்பவ இடத்தில் வாழை மரத்தை வெட்டிய மாரிமுத்து (60) மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.