வெப்படை அருகே நிதி நிறுவன அதிபர் விபத்தில் பலி
வெப்படை அருகே நிதி நிறுவன அதிபர் விபத்தில் பலியானார்.
பள்ளிபாளையம்:
பள்ளிபாளையம் அக்ரஹாரம் கோட்டக்காடு பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 36), நிதி நிறுவன அதிபர். நேற்று இரவு இவர் தனது நண்பர் கார்த்திக் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் வெப்படையில் இருந்து திருச்செங்கோடு நோக்கி சென்று கொண்டிருந்தார். இரவு 8.30 மணியளவில் இவர்கள் பாதரை அருகே சென்றனர். அப்போது திருச்செங்கோட்டில் இருந்து வந்த ஒரு மோட்டார் சைக்கிள் தனக்கு முன்னால் சென்ற லாரியை வேகமாக முந்தி செல்ல முயன்றபோது எதிரே மணிகண்டன் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் மணிகண்டன் தடுமாறி லாரியின் பின் சக்கரத்தில் மோட்டார் சைக்கிளுடன் விழுந்தார். அதே இடத்தில் நசுங்கி இறந்து விட்டார். கார்த்திக் லேசான காயம் அடைந்தார். திருச்செங்கோட்டில் இருந்து வந்த மோட்டார் சைக்கிளில் வந்தவர்களுக்கும் லேசான காயம் ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வெப்படை போலீசார் இறந்த மணிகண்டனின் உடலை பள்ளிபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழகு்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.