பரமத்திவேலூர் அருகே தண்ணீர் லாரி மீது கார் மோதியது;பெண் பலி-4 பேர் படுகாயம்

பரமத்திவேலூர் அருகே தண்ணீர் லாரி மீது கார் மோதிய விபத்தில் பெண் பலியானார். 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2023-01-03 18:45 GMT

பரமத்திவேலூர்:

அமெரிக்காவில் வசித்தவர்கள்

மதுரை அருகே உள்ள திருப்பாலை பகுதியை சேர்ந்தவர் வைத்தியலிங்கம் (வயது 60). இவருடைய மனைவி ஜெயந்தி (55). இவர்களின் மகள் சரண்யா (36) மற்றும் வைத்தியலிங்கத்தின் அக்காள் செண்பகம் (72). இவர்கள் அனைவரும் அமெரிக்காவில் வசித்து வந்தனர். தற்போது இந்தியா வந்துள்ள இவர்கள் மதுரை பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்து விட்டு நேற்று ஒரு சொகுசு காரில் மதுரையில் இருந்து கர்நாடக மாநிலம், பெங்களூருவில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று கொண்டு இருந்தனர். காரை திண்டிவனத்தை சேர்ந்த டிரைவர் செல்வக்குமார் ஓட்டி வந்தார்.

நாமக்கல் மாவட்டம், பரமத்தி அருகே சென்று கொண்டிருந்தபோது பைபாஸ் சாலையின் நடுவே உள்ள செடிகளுக்கு தண்ணீர் விட்டுக்கொண்டிருந்த தண்ணீர் டேங்கர் லாரியின் பின்னால் கார் எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் காரின் முன்பக்கம் அப்பளம் போல் நொறுங்கியது.

பெண் பலி

இந்த விபத்தில் காரில் வந்த ஜெயந்தி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். படுகாயம் அடைந்த செண்பகம், வைத்தியலிங்கம், அவருடைய மகள் சரண்யா மற்றும் கார் டிரைவர் செல்வக்குமார் (28) ஆகிய 4 பேரையும், அந்த பகுதியை சேர்ந்தவர்கள் காப்பாற்றி நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இவர்களில் செண்பகம், வைத்தியலிங்கம் ஆகிய இருவரும் மேல் சிகிச்சைக்காக மதுரையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு ெசல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கார் டிரைவர் செல்வக்குமார் மேல் சிகிச்சைக்காக நாமக்கல்லில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த விபத்து குறித்து பரமத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தின் காரணமாக கரூரில் இருந்து நாமக்கல் செல்லும் பைபாஸ் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்