பக்தர்கள் கூட்டத்துக்குள் கார் புகுந்து 2 பெண்கள் பலி; பழனிக்கு பாதயாத்திரை சென்றபோது பரிதாபம்
பழனிக்கு பாதயாத்திரை சென்றபோது, பக்தர்கள் கூட்டத்துக்குள் கார் புகுந்து 2 பெண்கள் பலியாகினர். மேலும் 5 பேர் படுகாயம் அடைந்தனர்.
பழனிக்கு பாதயாத்திரை சென்றபோது, பக்தர்கள் கூட்டத்துக்குள் கார் புகுந்து 2 பெண்கள் பலியாகினர். மேலும் 5 பேர் படுகாயம் அடைந்தனர்.
பழனிக்கு பாதயாத்திரை
முருகப்பெருமானின் 3-ம் படை வீடான பழனி முருகன் கோவிலில் தைப்பூசம், பங்குனி உத்திரம் உள்ளிட்ட திருவிழாக்கள் வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்த திருவிழாக்களை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கோவிலுக்கு பக்தர்கள் பாதயாத்திரையாக வருவது வழக்கம்.
அதன்படி, பழனி முருகன் கோவிலில் அடுத்த மாதம் (ஜனவரி) 29-ந்தேதி தைப்பூச திருவிழா தொடங்குகிறது. இதை முன்னிட்டு தற்போதே பழனிக்கு பாதயாத்திரையாக பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.
மதுரை, கரூர் குழுவினர்
இந்தநிலையில் மதுரை அனுப்பானடி பகுதியை சேர்ந்த சந்திரன் மனைவி செல்வி (வயது 48), அதே பகுதியை சேர்ந்த பக்தர்கள் குழுவுடன் பழனிக்கு பாதயாத்திரையாக 2 நாட்களுக்கு முன்பு புறப்பட்டார்.
நேற்று இரவு அந்த குழுவினர், திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்துக்கு வந்தனர். பின்னர் இரவில் அங்கேயே தூங்கினர். இன்று அதிகாலை அவர்கள், ஒட்டன்சத்திரத்தில் இருந்து பழனி நோக்கி மீண்டும் பாதயாத்திரை புறப்பட்டனர்.
கூட்டத்துக்குள் புகுந்த கார்
அப்போது செல்வியுடன் வந்தவர்கள் முன்னால் சென்று விட்டனர். இதனால் அவர் மட்டும் தனியாக நடந்து சென்றார். இதேபோல் கரூர் மாவட்டம் ஒட்டப்பட்டியை சேர்ந்த பக்தர்கள் குழுவினர் பின்னால் பாதபாத்திரையாக வந்தனர். இதனால் அவர்களுடன் சேர்ந்து செல்வி பாதயாத்திரையாக நடந்து சென்று கொண்டிருந்தார்.
திண்டுக்கல்-பழனி சாலையில் அதிகாலை 4 மணி அளவில், சத்திரப்பட்டியை அடுத்த வீரலப்பட்டி பிரிவு பகுதியில் செல்வி மற்றும் கரூர் ஒட்டப்பட்டியை சேர்ந்த பக்தர்கள் சென்று கொண்டிருந்தனர். அப்போது பின்னால் பழனி நோக்கி வந்த கார் ஒன்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பக்தர்கள் கூட்டத்துக்குள் புகுந்தது.
2 பெண்கள் பலி
இந்த விபத்தில் செல்வி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார். அவருடன் வந்த கரூர் ஒட்டப்பட்டியை சேர்ந்த பக்தர்களான கண்ணுசாமி மனைவி கருத்தா (50), ராமன் (40), கன்னியம்மாள் (50), ஸ்ரீரங்கன் (50), சந்திரா (35), போதும்பொண்ணு (31) ஆகிய 6 பேர் படுகாயம் அடைந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த சத்திரப்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மீட்பு பணிகளை மேற்கொண்டனர். விபத்தில் காயமடைந்த 6 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். மேலும் செல்வியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
இதற்கிடையே படுகாயமடைந்த கருத்தா மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.
கார் டிரைவர் கைது
பின்னர் விபத்து குறித்து சத்திரப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், விபத்தை ஏற்படுத்திய காரில் சென்னை பெருங்களத்தூரை சேர்ந்த அய்யப்ப பக்தர்கள் குழுவினர் வந்தனர். அவர்கள் சபரிமலைக்கு சென்றுவிட்டு, பழனிக்கு காரில் வந்து கொண்டிருந்தனர்.
காரை அதே பகுதியை சேர்ந்த தேவேந்திரன் (35) என்பவர் ஓட்டினார். வீரலப்பட்டி பிரிவு பகுதியில் அவர்கள் வந்தபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார், பழனிக்கு பாதயாத்திரையாக சென்ற பக்தர்கள் மீது மோதியது தெரியவந்தது.
இதையடுத்து கார் டிரைவர் தேவேந்திரனை போலீசார் கைது செய்தனர். கார் மோதியதில், பழனிக்கு பாதயாத்திரையாக சென்ற 2 பெண்கள் பலியான சம்பவம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.