அரசு பஸ்சும் -காரும் மோதிய விபத்தில் அய்யப்ப பக்தர் பலி
பொங்கலூரில் அரசு பஸ்சும் -காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் கார் டிரைவரான அய்யப்ப பக்தர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
பொங்கலூரில் அரசு பஸ்சும் -காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் கார் டிரைவரான அய்யப்ப பக்தர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
பஸ்-கார் மோதல்
பல்லடம் ராயர்பாளையத்தைச் சேர்ந்த ராஜன் என்பவரது மகன் தாஸ் (வயது 45). இவர் பல்லடத்தில் வாடகை கார் டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் ஒரு பெண் குழந்தை உள்ளது. தற்போது தாஸ் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு செல்ல மாலை அணிந்திருந்தார். இவர் காங்கயத்தில் இருந்து பல்லடம் நோக்கி நேற்று முன்தினம் இரவு சுமார் ஒரு மணி அளவில் சென்று கொண்டிருந்தார்.
பொங்கலூர் தொலைதொடர்பு அலுவலகம் அருகே வந்தபோது கோவையில் இருந்து கும்பகோணம் நோக்கி வந்த அரசு பஸ் எதிர்பாராதவிதமாக காருடன் நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் கார் அப்பளம் போல் நசுங்கியது.
அய்யப்ப பக்தர் பலி
இந்த விபத்தில் காரை ஓட்டி வந்த அய்யப்ப பக்தரான தாஸ் இடிபாடுகளுக்குள் சிக்கி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் பஸ்சின் நடத்துனரான திருச்சி, அண்ணா நகரை சேர்ந்த பாலசுப்பிரமணி (55), பஸ் டிரைவரான திருச்சி, மண்ணச்சநல்லூரைச் சேர்ந்த சுரேஷ் (44) ஆகியோர் காயம் அடைந்தனர்.
மேலும் காரில் மோதாமல் இருக்க பஸ் டிரைவர் வலது புறமாக பஸ்சை திருப்பியதில் அருகில் இருந்த ஒரு வீட்டின் சுற்றுச்சுவர் மீது பஸ் மோதியது. இதில் அந்த சுவர் இடிந்து விழுந்ததில் உள்ளே நிறுத்தப்பட்டிருந்த கார் சேதம் அடைந்தது.
போலீஸ் விசாரணை
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அவினாசிபாளையம் போலீசார் பல்லடம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக அவர்களும் சம்பவ இடத்திற்கு வந்து காருக்குள் சிக்கி இறந்த டிரைவர் தாஸை வெளியே கொண்டு வந்து பிரேத பரிசோதனைக்காக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து குறித்து அவினாசிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.