சேலத்தில் சொகுசு பஸ் மோதி நிதி நிறுவன ஊழியர் பலி-கரூரை சேர்ந்தவர்
சேலத்தில் சாலையை கடக்க முயன்ற போது சொகுசு பஸ் மோதி கரூரை சேர்ந்த நிதி நிறுவன ஊழியர் பலியானார்.
நிதி நிறுவன ஊழியர்
கரூர் மாவட்டம் கடவூர் நடுத்தெருவை சேர்ந்தவர் பசுபதி. இவருடைய மகன் அன்புமணி (வயது 24). இவர் சேலத்தில் உள்ள ஒரு நிதி நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று மாலை வேலை சம்பந்தமாக அவர் மோட்டார் சைக்கிளில் அம்மாபேட்டை பகுதிக்கு சென்றார். அங்கு அவர் சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றார்.
அப்போது கோவையில் இருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த ஒரு சொகுசு பஸ், மோட்டார் சைக்கிள் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்த அன்புமணி ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பலியானார்.
வழக்குப்பதிவு
இது குறித்து தகவல் அறிந்த அம்மாபேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். அங்கு பலியான அன்புமணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தால் அந்த பகுதியில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிப்படைந்தது.