காரிமங்கலம்:
ஆந்திர மாநிலம் குப்பத்தில் இருந்து மக்காச்சோளம் ஏற்றி கொண்டு சரக்கு வாகனம் ஒன்று சேலம் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த வாகனத்தை குப்பத்தை சேர்ந்த தேவேந்திரா (வயது 30) என்பவர் ஓட்டி சென்றார். காரிமங்கலம் அருகே உள்ள பொன்னேரி பகுதியில் சரக்கு வாகனத்தில் பின் பக்க டயர் திடீரென வெடித்தது. இதனால் சரக்கு வாகனம் நிலைத்தடுமாறி சாலையில் கவிழ்ந்தது. இதில் டிரைவர் தேவேந்திரா காயம் அடைந்தார். அந்த வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்த காரிமங்கலம் போலீசார் சரக்கு வாகனத்தை அப்புறப்படுத்தி, போக்குவரத்தை சீரமைத்தனர். மேலும் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.