சூளகிரி அருகே லாரி மீது ஆம்னி பஸ் மோதியதில் கிளீனர் பலி-டிரைவர் உள்பட 3 பேர் படுகாயம்
சூளகிரி:
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள தெற்குநாடு கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 43). லாரி டிரைவர். இவர் லாரியில் சரக்கு ஏற்றி கொண்டு பெங்களூருவுக்கு சென்று கொண்டிருந்தார். அந்த லாரி கிருஷ்ணகிரி-ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் சூளகிரி அருகே சென்று கொண்டிருந்தது. ஒட்டையனூர் என்ற இடத்தில் சென்றபோது, கோவையில் இருந்து பெங்களூரு நோக்கி சென்ற ஆம்னி பஸ், லாரியின் பின்புறம் வேகமாக மோதியது. இதில் பஸ் கிளீனரான கர்நாடக மாநிலம் சிமோகாவை சேர்ந்த மஞ்சுநாதா (32) என்பவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
மேலும் பஸ் டிரைவரான நாமக்கல் மாவட்டம் மோகனூர் சாலை காந்திநகரை சேர்ந்த வடிவேல் (43), பயணிகளான கோவையை சேர்ந்த வெற்றிவேல் (31), லோகேஷ் (40) ஆகிய 3 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து சூளகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.