கிருஷ்ணகிரி பகுதியில் வெவ்வேறு விபத்தில் 2 பெண்கள் பலி

Update: 2022-09-25 18:45 GMT

கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரியில் நடந்த வெவ்வேறு சாலை விபத்துகளில் 2 பெண்கள் பலியானார்கள்.

அரசு பஸ் மோதல்

திருப்பத்தூர் மாவட்டம் நாட்ராம்பள்ளி தாலுகா வெப்பல்நத்தம் அருகே உள்ள சின்னகவுண்டனூரை சேர்ந்தவர் வேலாயுதம். இவரது மனைவி சுமதி (வயது 38). இவர் நேற்று முன்தினம் மதியம் ஸ்கூட்டரில் கிருஷ்ணகிரியில் சென்னை சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த அரசு பஸ் ஸ்கூட்டர் மீது மோதியது.

இதில் பலத்த காயம் அடைந்த சுமதி சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் கிருஷ்ணகிரி டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் கபிலன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சுமதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பெண் பலி

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு தாலுகா கொத்தளம் அருகே உள்ள முருக்கல்நத்தம் பகுதியை சேர்ந்தவர் மதன். இவருடைய மனைவி ஜோதி (48). இவர் தனது மகன் சதீஷ்குமாருடன் (24) மோட்டார் சைக்கிளில் மோரமடுகு-கே.ஆர்.பி. அணை சாலையில் பழைய பையனப்பள்ளி பக்கமாக சென்று கொண்டிருந்தார். அப்போது அப்பகுதியில் நின்ற டிராக்டர் மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் ஜோதியும், அவரது மகன் சதீஷ்குமாரும் பலத்த காயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட ஜோதி சிகிச்சை பலனின்றி இறந்தார். இந்த விபத்து குறித்து கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்