கெங்கவல்லி:
கெங்கவல்லி அருகே ஆணையம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சூர்யா (வயது 26). இவர் தெடாவூரில் ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி சினேகா (22). இவர்களுக்கு திருமணமாகி 2 ஆண்டுகள் ஆகிறது. தற்போது சினேகா 4 மாத கர்ப்பிணியாக இருந்தார். இவர் அதே பகுதியில் உள்ள தனது தாயார் வீட்டில் இருந்து, கணவர் வீட்டுக்கு நடந்து செல்லும் போது, அந்த வழியாக வந்த பால் வேன் அவர் மீது மோதியது. இதில் சினேகா தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து கெங்கவல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து, பால் வேன் டிரைவர் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தை சேர்ந்த சங்கர் (32) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பால்வேன் மோதி கர்ப்பிணி பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.