சாலையை கடக்க முயன்ற போது லாரி மோதி டிரைவர் பலி

சேலத்தில் சாலையை கடக்க முயன்ற லாரி டிரைவர் ஒருவர் மற்றொரு லாரி மோதி பலியானார். விபத்தை ஏற்படுத்திவிட்டு நிறுத்தாமல் சென்ற வாகனத்தை ஊர்க்காவல் படை வீரர்கள் துரத்தி சென்று மடக்கி பிடித்து நாமக்கல் போலீசில் ஒப்படைத்தனர்.

Update: 2022-09-11 20:58 GMT

காய்கறி ஏற்றி வந்த லாரி

மதுரை மாவட்டம் வயலூர் அருகே உள்ள வள்ளல்குளம் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ். இவருடைய மகன் தெய்வம் (வயது 40), லாரி டிரைவர். இவர் நேற்று இரவு சேலம் அம்மாபேட்டையில் உள்ள ஒரு பனியன் கம்பனெியில் இருந்து தூத்துக்குடிக்கு துணிகள் ஏற்றிக்கொண்டு லாரியை ஓட்டிச்சென்றார்.

சேலம் சீலநாயக்கன்பட்டி பைபாஸ் சாலையோரம் இரவு 11 மணி அளவில் லாரியை நிறுத்திவிட்டு அங்கு உள்ள ஒரு ஓட்டலில் சாப்பிட்டார். பின்னர் லாரியை எடுப்பதற்காக அந்த பகுதியில் சாலையை கடக்க முயன்றார்.

அப்போது அந்த வழியாக காய்கறி ஏற்றிக்கொண்டு வேகமாக வந்த லாரி அவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

விரட்டி சென்றனர்

இந்த நிலையில் டிரைவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்ற காய்கறி லோடு லாரியை டிரைவர் அதிவேகமாக ஓட்டி சென்றார். அப்போது லாரியின் பின்னால் ஒரு காரில் கரூர் மாவட்டம், சின்னதாராபுரம் போலீஸ் நிலையத்தில் ஊர்க்காவல் படை வீரர்களாக உள்ள பாலசுப்பிரமணியன், சுப்பிரமணி உள்பட 3 பேர் வந்தனர்.

விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற லாரியை பிடிக்க சாமர்த்தியமாக பின் தொடர்ந்து விரட்டி சென்றனர். இந்த நிலையில் விபத்து நடந்தது குறித்து ஊர்க்காவல் படை வீரர்கள், சேலம் மாநகர போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து நாமக்கல் டவுன் போலீசாரிடம் விபத்தை ஏற்படுத்தி விட்டு லாரி ஒன்று வேகமாக நாமக்கல் நோக்கி வந்து கொண்டு உள்ளது. மேலும் லாரியை பிடிக்க முயலும் ஊர்க்காவல் படை வீரர்கள் உள்பட 3 பேரையும் லாரியை ஏற்றி கொல்ல முயல்கிறார். எனவே லாரியை மடக்கி பிடிக்கவும் என்று மாநகர போலீசார் கூறினர்.

ஊர்க்காவல் படை வீரர்களுக்கு பாராட்டு

இதனிடையே லாரி நாமக்கல் பஸ் நிலையம் அருகே சென்றது. தொடர்ந்து காரில் சென்ற ஊர்க்காவல் படை வீரர்கள் திடீரென்று லாரியை மடக்கி பிடித்தனர். அதேநேரத்தில் நாமக்கல் டவுன் போலீசாரும் அங்கு வந்தனர். பின்னர் லாரியை ஓட்டி வந்த டிரைவரை பிடித்து லாரியுடன் டவுன் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

பின்னர் லாரியை ஓட்டி வந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நள்ளிரவில் விபத்தை ஏற்படுத்திய லாரியை உயிரையும் துச்சம் என நினைத்து மடக்கி பிடித்த ஊர்க்காவல் படை வீரர்களை சேலம் மற்றும் நாமக்கல் போலீசார் வெகுவாக பாராட்டினர். இந்த நிலையில் விபத்தில் இறந்த டிரைவர் தெய்வத்தின் உடலை அன்னதானப்பட்டி போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்கு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்