சேலத்தில் ஓடும் பஸ்சில் இருந்து தவறி விழுந்த கண்டக்டர் பலி-நாய் குறுக்கே வந்ததால் பரிதாபம்
சேலத்தில் நாய் குறுக்கே வந்ததால், டிரைவர் பிரேக் போடவே ஓடும் பஸ்சில் இருந்து தவறி விழுந்த கண்டக்டர் பரிதாபமாக உயிரிழந்தார்.
கன்னங்குறிச்சி:
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
அரசு பஸ் கண்டக்டர்
சேலம் பழைய பஸ் நிலையத்தில் இருந்து ஏற்காடு அடிவாரம் பகுதியை நோக்கி நேற்று அதிகாலை அரசு டவுன் பஸ் ஒன்று புறப்பட்டு சென்றது. பஸ்சை வீராசாமி புதூர் பகுதியை சேர்ந்த டிரைவர் சீனிவாசன் ஓட்டிச் சென்றார். நாமக்கல் மாவட்டம் அத்தனூர் ஆலம்பட்டி பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் (வயது 56) என்பவர் கண்டக்டராக இருந்தார்.
அந்த பஸ் காலை 6.15 மணி அளவில் சேலம் செட்டிச்சாவடி அருகே பசுவக்கல் பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது பஸ்சின் படிக்கட்டில் நின்று பயணம் செய்த கண்டக்டர் ராஜேந்திரன் நிலைதடுமாறி தவறி ஓடும் பஸ்சில் இருந்து கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலையில் படுகாயம் ஏற்பட்டது.
பரிதாப சாவு
உடனடியாக 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தனர். ஆனால் ஆம்புலன்ஸ் வர தாமதம் ஆனதால் படுகாயத்துடன் உயிருக்கு போராடிய கண்டக்டர் ராஜேந்திரனை பஸ்சில் ஏற்றிக்கொண்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே ராஜேந்திரன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது தொடர்பாக கன்னங்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இது குறித்து போலீசார் கூறும்போது, கண்டக்டர் ராஜேந்திரன் படிக்கட்டில் நின்று கொண்டு சென்றுள்ளார். செட்டிச்சாவடி அருகே சென்ற போது நாய் குறுக்கே வந்ததால் டிரைவர் பிரேக் போட்டுள்ளார். அப்போது நிலை தடுமாறி கீழே விழுந்ததில் ராஜேந்திரன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார் என்று தெரிவித்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
வீடியோ வைரல்
இதனிடையே ஓடும் பஸ்சில் இருந்து கண்டக்டர் ராஜேந்திரன் கீழே விழும் காட்சி அங்கு உள்ள ஒரு வீட்டில் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. தற்போது அந்த வீடியோ காட்சி சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.