ஆத்தூர் அருகே சரக்கு வேன்-லாரி மோதல்; 2 பேர் பலி
ஆத்தூர் அருகே சரக்கு வேன்- லாரி மோதிய விபத்தில் 2 பேர் பலியானார்கள்.
ஆத்தூர்:
சரக்கு வேன்
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் முருகேசன். இவருடைய மகன் மாரிமுத்து (வயது 23). அதே பகுதியை சேர்ந்தவர் காளிதாஸ் (24). இவர்கள் 2 பேரும் சென்னை-சேலம் இடையே இயக்கப்படும் தினசரி பார்சல் சர்வீஸ் சரக்கு வேனில் டிரைவராகவும், கிளீனராகவும் மாறி, மாறி பணிபுரிந்து வந்தனர்.
இந்த நிலையில் நேற்று காலை ஆத்தூர் அருகே துலுக்கனூர் புறவழிச்சாலையில் அவர்கள் சென்ற சரக்கு வேன் பஞ்சரானது. இதைத்தொடர்ந்து அவர்கள் சாலையோரத்தில் வேனை நிறுத்தி டயரை மாற்றிக்கொண்டு இருந்தனர். அதே நேரத்தில் தூத்துக்குடியில் இருந்து பிளைவுட் ஏற்றிக்கொண்டு ஒரு லாரி திருச்சி, விழுப்புரம், ஆத்தூர் வழியாக சேலம் நோக்கி சென்று கொண்டிருந்தது.
2 பேர் பலி
லாரியை தூத்துக்குடியை சேர்ந்த டிரைவர் கண்ணன் (36) என்பவர் ஓட்டி வந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக கண்ணன் ஓட்டி வந்த லாரி, சரக்கு வேனின் பின்புறம் பயங்கரமாக மோதியது. இதில் சரக்கு வேனின் முன்புறம் டயரை மாற்றிக்கொண்டிருந்த மாரிமுத்து, காளிதாஸ் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். உடனே அவர்களை அக்கம்பக்கத்தினர், ஆத்தூர் தீயணைப்பு துறையினர் மீட்டு ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர்கள் 2 பேரையும் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி காளிதாஸ், மாரிமுத்து ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் விபத்தில் படுகாயம் அடைந்த லாரி டிரைவர் கண்ணன் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
விபத்து குறித்து ஆத்தூர் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.