தனியார் பஸ் டயர் வெடித்து விபத்து

பாப்பிரெட்டிப்பட்டி அருகே தனியார் பஸ் டயர் வெடித்து விபத்தில் 6 பயணிகள் காயம் அடைந்தனர்.

Update: 2022-07-27 16:55 GMT

பாப்பிரெட்டிப்பட்டி:

திருப்பத்தூரில் இருந்து சேலத்திற்கு அரூர் வழியாக தனியார் பஸ் நேற்று சென்றது. இந்த பஸ்சை ஊத்தங்கரையை சேர்ந்த டிரைவர் ராஜசேகர் (வயது 34) ஓட்டி வந்தார். கண்டக்டராக அரூர் அருகே பாளையத்தை சேர்ந்த சதீஷ் (வயது 35) இருந்தார். இந்த பஸ்சில் 50-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். பாப்பிரெட்டிப்பட்டியை அடுத்த கோட்டமேடு பஸ் நிறுத்தம் அருகே வந்த போது திடீரென பஸ்சின் முன் சக்கரம் வெடித்து தாறுமாறாக ஓடியது. இதனால் பஸ்சில் இருந்த பயணிகள் கூச்சலிட்டனர். மேலும் பஸ்சின் முன் பக்க கண்ணாடி உடைந்து நொறுங்கி பயணிகள் மீது விழுந்தது. இதில் பாப்பிரெட்டிப்பட்டியை சேர்ந்த முனுசாமி (52), அனுமன்தீர்த்தம் சின்னபையன் (59), துரைசாமி (40), மாதகபாடி நவீன்குமார் (38), மாம்பட்டி கிருஷ்ணமூர்த்தி (23), பறையப்பட்டி வசந்த் (20) ஆகிய 6 பேர் காயம் அடைந்தனர். டிரைவர் உள்பட பலர் லேசான காயம் அடைந்தனர். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் 6 பேரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மற்ற பயணிகள் மாற்று பஸ் மூலம் சேலத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து ஏ.பள்ளிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்