நடுரோட்டில் டயர் வெடித்து கவிழ்ந்த கார் மீது அரசு பஸ் மோதியது; 7 பேர் படுகாயம்

திருமங்கலம் அருகே காரின் டயர் வெடித்து கார் சாலையில் கவிழ்ந்தது. அப்போது பின்னால் வந்த அரசு பஸ் மோதியதில் 7 பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2022-06-19 16:48 GMT

திருமங்கலம், 

திருமங்கலம் அருகே காரின் டயர் வெடித்து கார் சாலையில் கவிழ்ந்தது. அப்போது பின்னால் வந்த அரசு பஸ் மோதியதில் 7 பேர் படுகாயம் அடைந்தனர்.

குலதெய்வ கோவில்

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் தாலுகா ஏழாயிரம்பண்ணையை சேர்ந்தவர் பரமன்(வயது 38). இவர் பழைய கார்களை விற்கும் தொழில் செய்து வருகிறார். பரமன் நேற்று காலை மனைவி மற்றும் குடும்பத்தினருடன் மதுரையில் உள்ள குலதெய்வம் கோவிலுக்கு சாமி கும்பிட காரில் சென்றார். பின்னர் அங்கிருந்து மீண்டும் திருமங்கலம்-விருதுநகர் நான்கு வழிச்சாலை வழியாக சொந்த ஊருக்குத் திரும்பிக் கொண்டு இருந்தனர்.

காரை அதே ஊரைச்சேர்ந்த மாரீஸ்வரன்(25) என்பவர் ஓட்டி வந்தார். கார் கள்ளிக்குடி அருகே வெள்ளாகுளம் விலக்கு பகுதியில் வந்தபோது திடீரென முன்பக்க டயர் வெடித்தது. இதில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர தடுப்பு சுவரில் மோதி சாலையின் நடுவே தலைகுப்புற கவிழ்ந்தது.

வழக்குப்பதிவு

அப்போது மதுரையில் இருந்து சிவகாசி நோக்கி 64 பயணிகளுடன் வந்த அரசு பஸ், கார் மீது மோதியது. இதனால் காருக்குள் இருந்த 2 ஆண்கள், 3 பெண்கள், 2 குழந்தைகள் உள்பட 7 பேரும் அலறினர். இதையடுத்து படுகாயம் அடைந்த அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் மாரீஸ்வரன் உள்ளிட்ட 7 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதுகுறித்து கள்ளிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்