சேலம் சீலநாயக்கன்பட்டியில் விசைத்தறி தொழிலாளி விபத்தில் பலி-3 பேர் காயம்

சேலம் சீலநாயக்கன்பட்டியில் விசைத்தறி தொழிலாளி விபத்தில் பலியானார். 3 பேர் காயம் அடைந்தனர்.

Update: 2022-06-13 22:23 GMT

அன்னதானப்பட்டி:

‌சேலம் மாவட்டம், தாசநாயக்கன்பட்டி அடுத்த நாழிக்கல்பட்டி காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் ஆனந்த்ராஜ் (வயது 39), விசைத்தறி தொழிலாளி. கடந்த 11-ந் தேதி இரவு இவர், அதே பகுதியை சேர்ந்த இவரது நண்பர்கள் தங்கேஸ்வரன் (32), ராமச்சந்திரன் (33), வினித் (29) ஆகியோருடன் சீலநாயக்கன்பட்டி பகுதிக்கு ஒரு வேலை விஷயமாக ஒரே மோட்டார் சைக்கிளில் சென்றனர். சீலநாயக்கன்பட்டி மாரியம்மன் கோவில் நுழைவு வாசல் அருகே அவர்கள் சென்ற போது அந்த வழியாக வந்த கார் ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதுவது போல வேகமாக உரசிக்கொண்டு சென்றது. இதில் மோட்டார் சைக்கிளில் சென்ற 4 பேரும் நிலை தடுமாறி கீழே விழுந்தனர். அப்போது எதிரே வந்த லாரி ஒன்று அவர்கள் தடுமாறி விழுந்த மோட்டார் சைக்கிள் மீது திடீரென மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் ஆனந்த்ராஜ் படுகாயம் அடைந்தார். மற்ற 3 பேரும் காயம் அடைந்தனர். இதையடுத்து அருகில் இருந்தவர்கள் அவர்கள் 4 பேரையும் மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஆனந்த்ராஜ் பரிதாபமாக இறந்தார். காயமடைந்த ராமச்சந்திரன், வினித் ஆகியோர் தனியார் ஆஸ்பத்திரியில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். தங்கேஸ்வரன் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். லாரி டிரைவர் யார்?, எங்கிருந்து லாரியை ஓட்டி வந்தார்? என்பது குறித்து விவரம் தெரியவில்லை. இது குறித்து அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்