பழுதாகி நின்ற லாரி மீது வேன் மோதி 3 பேர் பலி
பழுதாகி சாலையோரம் நின்ற லாரி மீது வேன் மோதி 3 பேர் உயிரிழந்தனர். 21 பேர் படுகாயம் அடைந்தனர்.
காரைக்குடி,
பழுதாகி சாலையோரம் நின்ற லாரி மீது வேன் மோதி 3 பேர் உயிரிழந்தனர். 21 பேர் படுகாயம் அடைந்தனர்.
வளைகாப்பு நிகழ்ச்சி
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே உள்ள பூச்சியேந்தல் கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது60). இவர் காரைக்குடி செல்லப்பா நகரில் உள்ள தனது மகளின் வளைகாப்பு நிகழ்ச்சிக்காக தனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் 24 பேருடன் ஒரு வேனில் காரைக்குடி நோக்கி வந்தார். கண்ணமங்கலத்தை சேர்ந்த டிரைவர் சதீஷ் வேனை ஓட்டினார்.
காரைக்குடி அருகே திருச்சி பைபாஸ் சாலையில் தீயணைப்பு நிலையம் அருகே வந்தபோது சாலையோரம் பழுதாகி நின்ற லாரி மீது எதிர்பாராதவிதமாக வேன் பயங்கரமாக மோதியது.
மோதிய வேகத்தில் லாரியும், வேனும் சாலையை விட்டு இறங்கி பள்ளத்தில் பாய்ந்தன. வேன் நொறுங்கி உருக்குலைந்தது. அதில் இருந்தவர்கள் தூக்கி வீசப்பட்டும், இடிபாடுகளில் சிக்கியும் அலறினர். உடனே அக்கம்பக்கத்தினரும், தீயணைப்பு படையினர், போலீசார் விரைந்து வந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.
3 பேர் பலி
இதில் வேனில் இருந்த மணிமேகலை (55) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயம் அடைந்த மற்ற 23 பேரை ஒவ்வொருவராக மீட்டு, காரைக்குடி அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி தவப்பிரியா (22), பாப்பாத்தி (55) ஆகியோர் உயிரிழந்தனர்.
மேலும் படுகாயத்துடன் உயிருக்கு போராடிய சங்கீதா(23), அவரது மகன் பிரதிக்ஷா (2), பூமிநாதன் ஆகியோர் மதுரை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிக்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.
கிருஷ்ணன் சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விபத்தில் இறந்த பாப்பாத்தியின் ஒரு கை துண்டானது. அதனை போலீசார் தேடி எடுத்தனர்.
கைது
இந்த விபத்து பற்றி தகவல் அறிந்த மாங்குடி எம்.எல்.ஏ., தேவகோட்டை கோட்டாட்சியர் பிரபாகரன், தாசில்தார் மாணிக்கவாசகம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தினர்.
விபத்து குறித்து குன்றக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் காயமின்றி தப்பிய வேன் டிரைவர் சதீஷ், போலீசாரால் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.